Skip to main content

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
g

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான புதிய தலைமுறை டிவி செய்தியாளர் நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதியன்று மாயமானார். மறுநாள் மாலையில் (24.6.2015), நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. 


பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில்தான் அவருடைய சடலம் கைப்பற்றப்பட்டது. அதனால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. 

 

s


இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்பட 17 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். 


இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி கே.ஹெச். இளவழகன் தலைமையில் நடந்து வருகிறது. 


இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 09, 2018) சாட்சிகள் விசாரணை, தேவூர் சிறப்பு எஸ்ஐ பாஷ்யத்திடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை செய்வதில் இருந்து தொடங்கியது. அவருடனான குறுக்கு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் சலசலப்புகள் ஏதுமின்றி குறுக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து உணவு இடைவேளை விடப்பட்டது. 


கோகுல்ராஜ் மர்ம மரணம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் தலைமறைவாக இருந்தார். அப்போது திடீரென்று அவர் புதிய தலைமுறை சேனலின் குமாரமங்கலம் பகுதி செய்தியாளர் விஜயகுமாரை அழைத்து சிறப்பு பேட்டி அளித்தார். அந்த வீடியோ அப்போது சேனலில் ஒளிபரப்பப்பட்டது. 


சிபிசிஐடி போலீசார், அந்த வீடியோ காட்சிகளை மேற்படி தொலைக்காட்சி நிர்வாகத்திடம் இருந்து பெற்று, முக்கிய ஆதாரமாக சேர்த்துள்ளனர். அப்போது யுவராஜை நேரில் பார்த்தவர் என்ற அடிப்படையில், அவரை பேட்டி எடுத்த செய்தியாளர் விஜயகுமாரையும் சாட்சியாக சேர்த்துள்ளனர்.


அதையடுத்து, விஜயகுமார் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டார். குற்றவாளிகள் கூண்டில் நிற்பவர்களைக் காண்பித்து யார் யாரை தெரியும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டபோது, யுவராஜையும், அவர் அருகில் நின்ற மற்றொருவரையும் தெரியும் என்று அடையாளம் காட்டினார். 


இந்த வழக்கு தொடர்பாக வேறு என்ன தெரியும் என்று கேட்டதற்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கு என்றும், அந்த வழக்கை ஆரம்பத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். யுவராஜிடம் பேட்டி எடுப்பதற்காக அவரை சமூக பேஸ்புக் எனப்படும் சமூக ஊடகம் மூலம் தொடர்பு கொண்டேன், என்றும் கூறினார்.

 

go


அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே எனப்படும் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, 'வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் வாட்ஸ்அப், பேஸ்புக் என்றெல்லாம் எதற்காக பேசுகிறார்?' என்று ஆட்சேபித்தார். அதற்கு நீதிபதி குறுக்கிட்டு, 'வாட்ஸ்அப், பேஸ்புக் எல்லாம் சமூக ஊடகங்கள்தான். அதைக் குறிப்பிடுவதில் தவறு இல்லை,' என்றார்.


'மீண்டும் பேட்டி தொடர்பாக செப். 15, 2015ம் தேதியன்று தொடர்பு கொண்டேன். பிறகு 03.10.2015ம் தேதி, 7.30 மணியளவில் யுவராஜை பேட்டி எடுத்தேன். அதற்கு அடுத்த நாள் அந்த வீடியோ பேட்டி புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பானது,' என்றார்.


இதையடுத்து, அப்போது புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பான யுவராஜின் பேட்டி அடங்கிய வீடியோ பதிவு நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயகுமாரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

vi


வழக்கறிஞர் ஜிகே: நீங்கள் புதிய தலைமுறை சேனலில் செய்தியாளராக இருக்கிறீர்களா?


சாட்சி விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: செய்தியாளர் எனில் உங்கள் நிறுவனம் அதற்கான அடையாள அட்டை வழங்கியிருக்குமே?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: அப்படியானால் அந்த அடையாள அட்டையில் ஐடி நம்பர் இருக்குமே?


விஜயகுமார்: எங்கள் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையில் நம்பர் ஏதும் இல்லை


ஜிகே: புதிய தலைமுறை செய்தியாளர் என்பது மட்டுமின்றி மற்ற வேலைகளும் செய்வீர்கள்?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: வேறு என்ன வேலை செய்கிறீர்கள்?


விஜயகுமார்: சொந்தமாக பிரவுசிங் செண்டர் நடத்தி வருகிறேன்


ஜிகே: புதிய தலைமுறை தலைமையகத்தில் இருந்து யுவராஜை பேட்டி எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னார்கள்?


விஜயகுமார்: அறிக்கை என்பது வேறு; பேட்டி என்பது வேறு


ஜிகே: போலீசார் விசாரணையின்போது யுவராஜ் பேட்டி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னதாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்?


விஜயகுமார்: ஞாபகம் இல்லை


ஜிகே: பேட்டி என்பது வேறு; அறிக்கை என்பது வேறு. அப்படித்தானே?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: அறிக்கை எதுவும் அனுப்பவில்லை?


விஜயகுமார்: இல்லை


ஜிகே: நீங்கள் இந்த நீதிமன்றத்தில் பார்த்த வீடியோ பேட்டிதான், அப்போது புதிய தலைமுறை டிவியிலும் ஒளிபரப்பானது. சரிதானா?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: நீங்கள் அனுப்பிய யுவராஜ் பேட்டி அடங்கிய வீடியோ எடிட் செய்யப்பட்ட பிறகுதான் வெளியாகும். சரிதானா?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: அந்த பேட்டி முழுவதும் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்?


விஜயகுமார்: அது எனக்குத் தெரியாது


ஜிகே: 3ம் தேதி பேட்டி எடுத்து, 4ம் தேதியே வெளியிட்டு விட்டீர்கள்?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: இந்த வழக்கு சம்பந்தமாக போலீசில் என்றைக்கு விசாரித்தார்கள்?


விஜயகுமார்: 26.12.2015ம் தேதியன்று கோயம்பத்தூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். ஏடிஎஸ்பி ஒருவர் என்னிடம் விசாரித்தார்.


ஜிகே: இதைப்பற்றி உங்கள் தலைமையகத்திற்கு தகவல் சொல்லியிருந்தீர்களா?


விஜயகுமார்: சொன்னேன்


ஜிகே: போலீசார் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதெல்லாம் சொன்னீர்களா?


விஜயகுமார்: இல்லை


ஜிகே: யுவராஜிடம் என்னென்ன கேள்விகள் கேட்டீர்கள் என்பதை போலீசார் விசாரணையின்போது சொன்னீர்கள்?


விஜயகுமார்: இல்லை. அவர்கள் அதைப்பற்றி கேட்கவும் இல்லை.


ஜிகே: யுவராஜிடம் பேட்டி எடுக்கும்போது என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று உங்கள் தலைமையகம்தான் தயாரித்துக் கொடுத்தது?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: அந்தக் கேள்விகள் எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா?


வியகுமார்: தெரியாது


ஜிகே: நீங்கள் யுவராஜை சோஷியல் மீடியா மூலமாகத்தான் தொடர்பு கொண்டதாகச் சொல்லி இருக்கிறீர்கள்?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: சோஷியல் மீடியா என்பதில் பல வகை உண்டு?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: வாட்ஸ்அப் மூலம் நீங்கள் யுவராஜை தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். அப்படியெனில் அதற்கென ஒரு செல்போன் நம்பர் இருக்கும்தானே?


விஜயகுமார்: நான் யுவராஜை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவில்லை. பேஸ்புக் மூலம்தான் தொடர்பு கொண்டேன்


ஜிகே: பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது என்றால் அதற்கு யுவராஜின் பாஸ்வேர்டும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: போலீசார் உங்களின் பேஸ்புக் ஐடி, யுவராஜின் ஐடி ஆகிய விவரங்களை பெற்றார்களா?


விஜயகுமார்: அதைப்பற்றி என்னிடம் விசாரிக்கவில்லை. நானும் சொல்லவில்லை


ஜிகே: நீங்கள் யுவராஜை, உங்கள் மொபைல் போனில் இருந்து பேஸ்புக்கில் தொடர்பு கொண்டீர்கள்...


விஜயகுமார்: இல்லை. என்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து தொடர்பு கொண்டேன்


ஜிகே: அப்படியெனில் அந்த விவரங்கள் உங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும்தானே?


விஜயகுமார்: அது.... குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான்......


ஜிகே: (சற்று கோபமாக) அது தேவையில்லை... நீங்கள் பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட விவரங்கள் பதிவு ஆகுமா ஆகாதா?


விஜயகுமார்: பதிவாகும்


ஜிகே: அந்த விவரங்கள் உங்கள் அலுவலக சர்வரில் பதிவாகி இருக்கும்தானே?


விஜயகுமார்: என்னுடைய சர்வரில் இருக்காது. பேஸ்புக் நிறுவன சர்வரில் இருக்கலாம்


ஜிகே: அந்த விவரங்கள் உங்களது சர்வீஸ் புரவைடருக்குத் தெரியுமல்லவா?


விஜயகுமார்: அதுபற்றி எனக்குத் தெரியாது


ஜிகே: நீங்கள் யுவராஜை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டதற்கான எந்த ஆவணமும் உங்களிடம் கிடையாது?


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: உங்கள் தலைமை அலுவலகத்திலும் இதுபற்றி எந்த ஆவணங்களும் கிடையாது....


(அப்போது நீதிபதி கே.ஹெச். இளவழகன் குறுக்கிட்டு, அந்தக் கேள்விக்கு ஆட்சேபனை தெரிவித்தார்)


ஜிகே: பேஸ்புக் மூலமாக யுவராஜை தொடர்பு கொண்டது குறித்து உங்கள் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்தீர்களா?


விஜயகுமார்: தெரிவித்தேன்


ஜிகே: சம்பவத்தன்று யுவராஜூடன் கிரிதரன் இருந்தாரா?


(எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, யுவராஜை பேட்டி எடுத்த நாளைத்தான் 'சம்பவத்தன்று' என்று குறிப்பிட்டார். ஆனால், விஜயகுமார் அந்த சொல், கோகுல்ராஜ் கடத்தப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட நாளைக் குறிப்பதாக எண்ணி, சம்பவத்தன்று இல்லை சார்.... நான் பேட்டி எடுத்த நாளன்று என குறிப்பிட்டார். அதற்கு வழக்கறிஞர் ஜிகே, இங்கே  சம்பவத்தன்று என்பது நீங்கள் பேட்டி எடுத்த நாளைத்தான் குறிக்கும் என விளக்கம் அளித்தார்.)


விஜயகுமார்: ஆமாம்


ஜிகே: போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் நிறுத்தி உங்களை அடையாளம் காட்டச்சொன்னார்களா?


விஜயகுமார்: இல்லை


ஜிகே: போலீசார் விசாரணையின்போது நீங்கள் பேட்டி எடுக்க பயன்படுத்திய உபகரணங்களை பார்த்தார்களா?


விஜயகுமார்: இல்லை


ஜிகே: நீங்கள் பேட்டி எடுத்த வீடியோவை எடிட் செய்த நபர் யார் என்று போலீசாருக்கு தெரியுமா?


விஜயகுமார்: தெரியாது


ஜிகே: உங்கள் தலைமை அலுவலகத்தின் உத்தரவின்பேரிலும், போலீசாரின் நிர்ப்பந்தத்தின்பேரிலும் நீங்கள் இங்கே பொய் சாட்சி சொல்கிறீர்கள் என்கிறேன்...


விஜயகுமார்: அப்படி இல்லை


ஜிகே: நீங்கள் குறிப்பிட்ட அந்த நாளில் யுவராஜை பேட்டி எடுக்கவில்லை என்கிறேன்...


விஜயகுமார்: தவறு


இவ்வாறு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை செய்தார்.

 

y


கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் யுவராஜ் வந்து சென்ற காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அதனால், அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து அவர், யுவராஜை அடையாளம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் நீதிமன்றத்தில் அந்தக் காட்சிகளும் திரையிட்டுக் காட்டப்பட்டது. ஆனால் ஏனோ விஜயகுமார், அந்தக் காட்சிகளைப் பார்த்து யுவராஜை அடையாளம் கூற மறுத்துவிட்டார்.


இதையடுத்து அரசுத்தரப்பு சாட்சியான, அக்கம்மாபேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரை சாட்சி சொல்ல அழைத்தனர். இவர்தான் சம்பவத்தன்று யுவராஜூக்கு தன்னுடைய செல்போனையும், மோட்டார் சைக்கிளையும் கொடுத்து உதவினார் என்றும் சிபிசிஐடி தரப்பு கூறுகிறது. 


ஏற்கனவே செந்திலிடம் சிஆர்பிசி 164வது பிரிவின்கீழ், நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்த செந்தில், 9ம் தேதி விசாரணையின்போது பிறழ் சாட்சியமாக மாறினார். யுவராஜூக்கு தனது செல்போனையோ, மோட்டார் சைக்கிளையோ வழங்கவில்லை என்றார். நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட அவருடைய செல்போனையும்கூட, அது தன்னுடைய செல்போன் அல்ல என்று தடாலடி பல்டி அடித்தார்.


அதன்பிறகு, அவருடைய மனைவி மாலதியை சாட்சி சொல்ல அழைத்தனர். அவரும் பிறழ் சாட்சியம் அளித்தார். யுவராஜ் வசிக்கும் ஊரில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள்தான், அரசுத்தரப்பு சாட்சியான செந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ad


இதையடுத்து, வழக்கறிஞர் பார்த்திபன் அரசுத்தரப்பில் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டார். 24.6.2015ம் தேதியன்று தனது கட்சிக்காரர் ஒருவரின் வழக்கு சம்பந்தமாக திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்குச் மதியம் 2 மணியளவில் சென்று இருந்ததாகவும், அப்போது கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன், தாயார் சித்ரா, கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவர்களின் நண்பர் கார்த்திக்ராஜா ஆகியோர் அங்கே இருந்தார்கள் என்றும் சொன்னார். தனக்குத் தெரிந்த ஒருவரின்  நண்பர் என்ற வகையில் கொலையுண்ட கோகுல்ராஜை தெரியும் என்றும் சொன்னார். 


வழக்கறிஞர் பார்த்திபன் நீண்ட நேரம் சாட்சியம் அளிக்க இருந்த நிலையில், போதிய நேரமின்மையால் பிரிதொரு நாளில் சாட்சியை தொடரவும், அன்றைய தினமே அவரிடம் குறுக்கு விசாரணை வைத்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதி கே.ஹெச். இளவழகன் கூறினார். இதையடுத்து சாட்சி விசாரணையை 19.11.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.  

 

 

Next Story

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Separate law to prevent caste incident

 

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு  காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.

 

அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

 

இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.