Skip to main content

திடீர் அரசியல் திருப்பம் - கோவாவில் ஆட்சியமைக்கக் கோரும் காங்கிரஸ்! 

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றியடைந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க கோரும் முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

goa

 

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க. 13 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆட்சியமைக்க போதுமான 21 தொகுதிகளை யாரும் பெறாத நிலையில், காங்கிரஸ் மட்டுமே கூடுதலான தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தது.

 

ஆனால், மகாராஷ்டிராவாடி கோமண்டக், கோவா ஃபார்வட் பார்ட்டி மற்றும் சுயேட்சைகள் என தலா 3 வீதம் 9 எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க. 22 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியமைத்தது. கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 2017 சட்டமன்றத் தேர்தலில் 17 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற காங்கிரஸ், தற்போது ஆட்சியமைக்க அனுமதி கோரி ஆளுநர் மாளியை நோக்கி பேரணி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளை யாரும் பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க.வை ஆளுநர் வஜுபாய் ஆட்சியமைக்க அழைத்தார். அதன்படி, எடியூரப்பா கர்நாடகாவின் 23ஆவது முதல்வராக இன்று பதவியேற்றார். இந்நிலையில், கோவாவின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது ஆட்சி அதிகாரம் கோருவது மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்