Gandhiji Memorial Day: CM Tribute Acceptance of pledge of abolition of untouchability

தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 78வது நினைவு தினம் இன்று (30.01.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

காந்தியடிகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உத்தமர் காந்தியடிகள் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார். 18 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து, இங்கிலாந்தில் சட்டப் படிப்பு பயின்றார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் நண்பராகத் திகழ்ந்த உத்தமர் காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில், இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததைக் கண்டித்து அகமதாபாத்திலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள தண்டி கடற்கரை நோக்கி நீண்ட நடை பயணத்தைத் தொடர்ந்தார். தண்டி கடற்கரை வந்து சேர்ந்த பின்பு உப்பைத் தயாரித்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக பகிரங்கமாக பொது மக்களுக்கு உப்பை விநியோகம் செய்தார். இந்நிகழ்வு உப்பு சத்தியாகிரகம் என்று வரலாற்றில் போற்றப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்றுப் பெரும் பங்கு வகித்தார்.

Advertisment

Gandhiji Memorial Day: CM Tribute Acceptance of pledge of abolition of untouchability

காந்தியடிகளுக்கு மகாத்மா எனும் பட்டத்தை இரவீந்தரநாத் தாகூர் வழங்கினார். காந்தியடிகள் 1921ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் மாற்று உடை இல்லாமல் ஒரே ஆடையை அணிந்திருப்பதையும் பெரும்பாலான மக்கள் வேட்டி துண்டு அணிந்துயிருப்பதையும் கண்டார். அதனை உணர்ந்த உத்தமர் காந்தியடிகள் அன்று முதல் ஆடம்பர உடைகளைத் துறந்து இடுப்பில் ஒரு ஆடையையும், தோளில் ஒரு ஆடையையும் அணிவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.