Former IAS officer VK Pandian joined the Biju Janata Party

Advertisment

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.

இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி (20.10.2023) வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23 தேதி அவரது விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கு மறுநாள் (24.10.2023) ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இவர் இனி, முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிறகு, “முதல்வரின் வழிகாட்டுதலுடனும், கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்புடனும், மாநில மக்களுக்காக தன்னலமின்றி நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பணிவுடன் பாடுபடுவேன்” என்று வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.