saroja

Advertisment

"கிறிஸ்டி பிரைடு" நிறுவனத்தில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.டி. ரெய்டு நிறைவுக்கு வந்தது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுக்க சத்துமாவு, பருப்பு மற்றும் சத்துணவுமுட்டை வழங்கி வருகிறது கிறிஸ்டி பிரைடு என்ற நிறுவனம். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டது. முட்டை மற்றும் பருப்பு, மாவு சப்ளையில் ஏராளமான முறைகேடுகளை இந்நிறுவனம் செய்து வந்துள்ளது. இதன் பலனாக பல கோடிகள் குவித்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத இந்த வருமானம் பற்றி பல புகார்கள் சென்றது. இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 5ந் தேதி இந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் வீடுகள் குடோன்கள் என சென்னை, பெங்களூர், கோவை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு இப்படி பல ஊர்களில் 76க்கும் மேற்பட்ட இடங்களில் 400 வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில் இறங்கினார்கள்.

Advertisment

இந்த ரெய்டு இரண்டாம் நாளான (6ந் தேதி) இன்றும் நடைபெற்றது. இரண்டு நாள் ரெய்டில் கணக்கில் வராத ஐந்து கோடி ரூபாய் பணமும் ஏராளமான சொத்து மற்றும் பொருட்கள் ஆவணங்கள் கிடைத்துள்ளதாம். இதில் குறிப்பாக இரண்டு டைரிகளை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் சத்துணவு சப்ளை ஒப்பந்தத்திற்கு அனுமதி மற்றும் ஆதரவு கொடுத்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் பட்டியல் உள்ளதாம். குறிப்பாக இது சார்ந்த துறையான சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பெயரும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதாம். அது லஞ்சம் சம்பந்தமான கணக்கு பட்டியல் என கூறப்படுகிறது. ஆனால் இதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்கள். இந்த கிறிஸ்டி பிரைடு நிறுவன உரிமையாளர் குமாரசாமியை பெங்களுரில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.