
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரில், விளாத்திகுளம் உமா மகேஷ்வரியும் ஒருவர். இவர் தான் எம்.எல்.ஏ என்றாலும், கட்சி செயல்பாடுகளிலும் சரி, கான்ட்ராக்ட் போன்ற மற்ற விஷயங்களில் கணவர் ஓ.எஸ்.ரகுபதி தான் எல்லாமே. இவரது (உமா மகேஷ்வரி) வெற்றிக்கு சொந்த ஜாதி ஓட்டு (ரெட்டியார்) ஒரு காரணம் என்றாலும். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ரூபம் வேலவனும் (தேவர்) ஒரு காரணம்.

ஆனால், இவருக்கும் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் (இப்போது அ.ம.மு.க)ரூபம் வேலவனுக்கும் இப்போது ஏழாம் பொருத்தமாக உள்ளது. அ.ம.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரராஜூவும் (இவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்) ஒன்றிய செயலாளர் ரூபம் வேலவனும் தொகுதி முழுக்க ஊர் ஊராக சுற்றி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உமா மகேஷ்வரியோ, அவரது கணவர் ரகுபதியோ கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்தமாதம் கருங்குளத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் திருமண விழாவை முன்னிட்டு, ரூபம் வேலவன் தனது முகநூல் பக்கத்தில், ‘மறந்தவர்களுக்கு நினைவூட்டல்’ என்ற தலைப்பில் திருமண அழைப்பு பேனரை பதிவிட்டுள்ளார். அதற்கு பின்னூட்டமாக ஓ.எஸ்.ரகுபதி, “எம்.எல்.ஏவை தவிர்த்து விளையாடும் உங்கள் பிழைப்பு அரசியல் தவறானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனே பதிலுக்கு ரூபம் வேலவன், எம்எல்ஏ உமா மகேஷ்வரியை வரவேற்று, வாழ்த்தி முந்தைய காலத்தில் வைத்திருந்த பேனர்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கும், “ஆக தாங்கள் சொல்ல வருவது என்ன.?” என்று ரகுபதி பதிவிட்டுள்ளார். உடனே ரூபம் வேலவன், கிராம மக்களையும், கழகத்தினரையும் சந்திக்கும் புகைப்படத்தை கழகத்தின் நன்மை கருதியே பதிவு செய்கிறோம். பதிவுகளை ஏளனம் செய்பவர்களுக்கு பாடமாகட்டும் என்று ரகுபதியை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறாக இவர்களது யுத்தம் சென்று கொண்டிருப்பதால், தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி தீர்ப்பு சொல்வதற்கு முன்பே, தினகரன் அணியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ அணி மாறினார் என செய்தி வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)