Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு தொடக்கம்!

Erode east by election Voting begins

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இன்று (05.02.2025) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி ஆகியோர் போட்டியில் உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன.

இந்தஇடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு முனைப் போட்டியே நிலவுகிறது. வேட்பாளர் அறிவித்த உடனேயே திமுக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியது. அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக வீடுவீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 24ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 237 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரத்து 600 காவல்துறையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி சித்தோட்டில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும். முன்னதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொகுதியில் உள்ள 20 மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டன.

polling Voting
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe