Skip to main content

கரோனா வார்டில் ஈரோடு கலெக்டர் திடீர் விசிட்...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

erode district collector

 

கரோனா வைரஸ் பரவல் முதலில் பரவிய ஈரோட்டில் அதைத் தடுக்கும் தொடர் நடவடிக்கையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் சக்திகணேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட பொதுச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் திருமதி சவுண்டம்மாள் ஆகிய உயர் அதிகாரிகள் நேரடியாகக் களம் இறங்கினர். மேலும், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் உழைப்பாலும் நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்கள் 70 பேர் என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டது. 

 

தொடர்ந்து யாருக்கும் வைரஸ் பரவாமல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதம் இதே நிலை நீடித்ததால்  மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

ஆனால் சென்னை உட்பட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் ஈரோடு வந்தனர். அப்படி வந்த சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. தற்போது வரை எண்ணிக்கை 200 வரை வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மருத்துவக்கல்லூரி பெருந்துறையில் உள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை, உணவு-குடிநீருக்குச் சிரமமாக உள்ளது, பணியாளர்கள் உதவும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதில்லை என வாட்ஸ்அப்பில் பேசி அனுப்பினார்கள். 

 

erode district collector

 

இந்த வாட்ஸப் பதிவு வைரலாகப் பரவியது. இது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கவனத்துக்கும் சென்றது. ஆட்சியர் கதிரவன் உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசி கரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சையும் உணவும் தேவையான அடிப்படை வசதிகளையும் உடனே செய்து கொடுங்கள் என உத்தரவிட்டார். அதோடு நிற்காமல் திடீரென்று வியாழக்கிழமை மதியம் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பிறகு கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ள வார்டுக்குச் சென்றுள்ளார். 

 

அப்போது சில ஊழியர்கள், ஐயா வைரஸ் தொற்று உள்ளவர்கள் வார்டுக்கு வேண்டாமே எனக்கூற, "நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். மக்கள் பணி செய்யத் தயக்கம் கூடாது. அவர்கள் குறை கூறியுள்ளார்கள். தற்போது அது நிவர்த்தி ஆகி விட்டதா என்பதை நேரில் சென்று தான் கேட்பேன்" எனக் கூறிவிட்டு  அந்த வார்டுகளுக்கு நேரடியாகச் சென்றார்.

 

http://onelink.to/nknapp

 

அங்கிருந்த பெண்கள் மற்றும் சிலரை அழைத்த ஆட்சியர் கதிரவன் உங்களுக்கு அடிப்படையான தேவைகளை இந்த மருத்துவமனை செய்து கொடுக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ஐயா இப்போது அனைத்தும் எங்களுக்கு வழங்கப்படுகிறது  எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கூறினார்கள். அதன்பிறகு சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு வெளியே வந்தார் ஆட்சியர் கதிரவன்.

 

வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ வார்டுக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டி வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் அனைவராலும் பாராட்டப்படுகிறார்..

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சாதி மறுப்பு திருமணம்; 16 வயது சிறுமி கொடூர கொலை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Tragedy of 16-year-old sister for attempted incident

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (24). இவருக்கு, 10ஆம் வகுப்பு படிக்கும் ஹாசினி்(16) என்ற தங்கை இருந்தார். இந்த நிலையில், சுபாஷும் சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சுவும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மஞ்சுவின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023ஆம் ஆண்டு மஞ்சுவும், சுபாஷும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர், சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (06-03-24) சுபாஷ், தனது தங்கையை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மஞ்சுவின் தந்தை சந்திரன், வேன் ஒன்றை ஓட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். அதன் பின்னர், வேனை அங்கே நிறுத்திவிட்டு சந்திரன் தனது மனைவியை அழைத்து தலைமறைவானார். இந்த பயங்கர விபத்தில், சுபாஷ் மற்றும் ஹாசினி பலத்த காயமடைந்தனர். 

Tragedy of 16-year-old sister for attempted incident

இந்த கொடூர சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சுபாஷ் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தங்கை ஹாசினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த ஈரோடு மாவட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சந்திரன் மற்றும் சித்ராவை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை திருமணம் செய்த மருமகனை கொலை செய்யும் முயற்சியில், மருமகனின் தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.