election commission of india dmk party udhayanidhi stalin

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் சுஷ்மா சுவராஜும், அருண் ஜெட்லியும் இறந்ததாகப் பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (07/04/2021) மாலை 05.00 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்குநோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், "கடந்த மார்ச் 31- ஆம் தேதி தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது மரியாதை வைத்துள்ளேன். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. முழு விளக்கத்தையும் நேரில் தர வாய்ப்பு வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.