Election Commission criticizes Rahul Gandhi for alleges maharashtra election

மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நவம்பரின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பா.ஜ.க மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ராகுல் காந்தி இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகிறார். அதன்படி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. அந்த மேட்ச் பிக்சிங் அடுத்து பீகாரிலும் நடக்கும். பின்னர் பாஜக எங்கு தோற்கிறதோ அங்கும் வரும். மேட்ச் பிக்சிங் தேர்தல்கள் ஜனநாயகத்திற்கும் ஒரு விஷம். சம்பந்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களைக் காண வேண்டும். அவர்களே தீர்ப்பளிக்க வேண்டும். பதில்களைக் கோருங்கள்” என்று பா.ஜ.க மீதும் தேர்தல் ஆணையம் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.

Advertisment

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து பதிலளித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, ‘ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், முறையாக நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸின் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ மறுநாள் தேர்தல் அதிகாரி முன் எந்தவொரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளையும் எழுப்பவில்லை.

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக எந்தவொரு கட்சியும் மேல்முறையீடுகளை தாக்கல் செய்யவில்லை. இதனால் எந்தக் குறையும் இல்லை என்பது தெளிவாகிறது. யாராவது தவறான தகவல்களைப் பரப்பினால், அது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. மேலும் தேர்தல்களின் போது அயராது மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் பணிநீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. வாக்காளர்களின் எந்தவொரு சாதகமற்ற தீர்ப்புக்குப் பிறகும், தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது’ என்று தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் எதிர்வினைக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், மகாராஷ்டிராவின் வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

Advertisment

Election Commission criticizes Rahul Gandhi for alleges maharashtra election

2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும், இந்தியத்தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இது தொடர்பாக ஆணையத்திடம் முறையான புகார் அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தற்போது ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, ‘காங்கிரஸும், குறிப்பாக ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையத்தைப் பற்றி பொதுவெளியில் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால் முறையான பாதையை எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களைக் கேட்கும்போது அவர்கள் ஒருபோதும் ஆஜராக மாட்டார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை வைத்த போதிலும், கருத்து தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட, அவர் முறையான புகார் அளிக்கவில்லை. விஷயம் மிகவும் தீவிரமானது என்றால், ராகுல் காந்தி ஏன் தேர்தல் ஆணையத்தை சந்திக்க நேரம் கேட்கவில்லை?. தேர்தல் செயல்முறையின் நேர்மையைக் குறை கூறுவதற்குப் பதிலாக, வாக்காளர்களை ஈடுபடுத்துவதில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.