ADVERTISEMENT

தேர்தல் நடத்தை அமலுக்குப் பிறகு எடுத்த முதல் நடவடிக்கை; தேர்தல் ஆணையம் அதிரடி!

03:15 PM Mar 18, 2024 | mathi23

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அதே வேளையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தது. இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

ADVERTISEMENT

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 50% வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அதே போல், தலைமைத் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தைக்கு கீழ் அமலுக்கு கொண்டுவந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், மேற்கு வங்க மாநில டி.ஜி.பியாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT