Skip to main content

மத்திய அரசிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி: கே.என். நேரு கடும் கண்டனம்

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

“டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டிக்க துணிவில்லாத, அதற்கு மக்களிடம் கருத்துக் கேட்பதோ, சுற்றுச் சூழல் அனுமதியோ கூடத் தேவையில்லை என அமைச்சர் மூலமாக கடிதம் எழுதி மத்திய அரசிடம் சரணடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக அபாண்டமாக பொய் கூறுவதா?” என்று முன்னாள் அமைச்சரும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு, எம்.எல்.ஏ.,  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

K. N. Nehru



இதுதொடர்பாக கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18,650 கோடி ரூபாய் மதிப்பில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை  அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்க இன்றுவரை துணிச்சல் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தார் என்று அபாண்டமாக- அப்பட்டமான பொய் பேசுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

 “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து” “கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகளைக் கைது செய்து” “ நெடுவாசல் போராட்டத்திற்காக சேலத்து மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவி விட்டு”“விவசாயிகளுக்காகப் போராடிய  பேராசிரியர் ஜெயராமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து”விவசாயிகளின் மீது அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றிக் குறை கூற எந்த யோக்கியதையும் இல்லை.
 

சட்டமன்றக் கூட்டத்தில் எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் எல்லாம் “நாங்கள் அனுமதிக்கமாட்டோம்”என்று பொய் சொன்ன அமைச்சர்களும், முதலமைச்சரும், வேதாந்தாவிற்கும், ஓன்.சி.ஜி.க்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்த போது வாய் மூடி மவுனிகளாக இருந்தது ஏன்?


 

“மக்கள் கருத்து” கேட்க வேண்டியதில்லை, “சுற்றுப்புறச்சூழல் அனுமதி முன்கூட்டியே பெற வேண்டியதில்லை” என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சரை இன்றுவரை பதவி நீக்காதது ஏன்? காவிரி டெல்டாவிற்கு எதிராக அதிமுக அரசு செய்யும் துரோகத்தை எங்கள் கழகத் தலைவர் சுட்டிக்காட்டிய பிறகு கூட இன்று வரை அப்படி  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை திரும்பப் பெறவோ, அதற்கு ஒரு விளக்கம் சொல்லவோ அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போயிருக்கும் முதலமைச்சர், தனக்கு அரசு விழா கிடைத்து விட்டது என்பதற்காக தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப்பதை எந்த தி.மு.க. தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
 

அதிமுக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடு இல்லை என்றால் இதுவரை “ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதிக்காதீர்கள்” என்று எந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்காவது முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறாரா? தைரியம் இருந்தால் அப்படி போட்ட உத்தரவை அவரால் வெளியிட முடியுமா? “ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானம் போடுங்கள் என்று எங்கள் கழகத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இன்றுவரை அப்படியொரு தீர்மானம் போடுவதற்கு வலிமை இருக்கிறதா? நெடுவாசல் போராட்டக் காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் மன உறுதி கூட இல்லாத முதலமைச்சர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடிக் கொள்ள நினைப்பது வெட்கக் கேடாக இல்லையா?
 

மத்திய பா.ஜ.க. அரசு – தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு - தமிழகத்தில் உள்ள  பல்வேறு மாவட்டங்களில்  ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்ட பிறகு, “ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம்”என்றும், “கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியே பெற வேண்டியதில்லை”என மத்திய பா.ஜ.க. அரசு கூறிவிட்ட நிலையில், “நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்” என்றும் முதலமைச்சர் பேசியிருப்பது ஏமாற்று வேலை. நீட் தேர்வை விட மாட்டோம் என்று தமிழக மக்களை ஏமாற்றியது போல் இன்றைக்கு விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.  காவிரி டெல்டா விவசாயிகளுக்கு  செய்துள்ள பச்சை துரோகத்தை திசைதிருப்ப, “காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” என்று இன்று முதலமைச்சர் சேலத்தில் அறிவித்திருக்கிறார்.


 

துயரப்படும் விவசாயிகளின் கடன்களைக் கூடத் தள்ளுபடி செய்ய மனமின்றி - “கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல் ஒரு கபட நாடகத்தை இன்று அரங்கேற்றியிருக்கிறார். இப்படியெல்லாம் கூறிவிட்டால், 131 விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாகவும் - அவர்களின் மீது காவல்துறையை வைத்து அராஜகத்தை ஏவி விட்டதற்குப் பொறுப்பானதுமான அதிமுக ஆட்சியின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று முதலமைச்சர் கனவு கண்டால் - அது பகல் கனவாகவே முடியும்.
 

ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக”அறிவிக்கும் முன்பு - முதலில் “ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்”என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்; ஏற்கனவே வேதாந்தா மற்றும் ஓன்.சி.ஜி.சி. நிறுவனங்களுக்கு தமிழகத்தில் - குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; அது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க “மக்கள் கருத்துக் கேட்பு”கூட்டமும், “சுற்றுச்சூழல் அனுமதியும்” தேவையில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு கருப்பண்ணன் எழுதிய கடிதத்தை நாளையே திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் செய்து விட்டு, பிறகு “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவிக்கப்படும் என்று இப்போது அளித்துள்ள வாக்குறுதியை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி பின்வாங்கி விடாமல் வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறேன்.

 

mks-eps


 

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒரு புறம் பணிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு மற்றொரு புறம் “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பேன்” என்று  கூறி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி “இரட்டை வேடம்” போட வேண்டாம்  என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.