Skip to main content

பல சட்ட சிக்கல்கள் உள்ள காரணத்தினால், மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை: கிரிஜா வைத்தியநாதன்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018


மெரினாவில் நல்லடக்கம் செய்ய பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினால், ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்கள் அவை உறுப்பினர், கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரிடம்,

i)ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும்;

ii காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்தார்.

இதனிடையில் கலைஞர் மறைந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்கள்: i) மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்யவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும்,

ii) அன்னாரது இறுதி சடங்கு அன்று (8.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும்,

iii) அன்னாருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும்; அத்தருணத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும்; அன்னாரின் மீது தேசிய கொடி போர்த்தி, இராணுவ மரியாதையுடன் குண்டு முழக்க மரியாதையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

iv) தமிழ்நாடு அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கவும், அந்த காலகட்டத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; அரசு சார்ந்த விழாக்கள் இரத்து செய்யப்படும் எனவும்,

v) தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும் எனவும்,

vi) காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என அவர் அதில் கூறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்