Skip to main content

தாய்-சேய் மரணத்திற்கு டாக்டரே காரணம்..! சட்ட நடவடிக்கை, நஷ்ட ஈடு வசூல்... -மனித உரிமை ஆனையம் அதிரடி தீர்ப்பு

 


நாட்டில் எல்லாமே நவீனம் ஆகிவிட்டது. தீராத நோய்க்கு கூட மருந்து கண்டுபிடிக்கும் அறிவியல் வளர்ந்துவிட்டது. ஊருக்கு ஊர் பெட்டிக்கடை போல்  தனியார் மருத்துவமனைகள் பெருகிவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள அரசு சுகாதாரத்துறை தான் மக்கள் நல்வாழ்வுக்கான அனைத்து சேவைகளையும் திறம்பட செய்து முதலிடத்தில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுயமாக பெருமை பொங்க கூறுகிறார். 

 

Judgment


 

 

ஆனால் பேறுகால மரணம் என்பது மிகக் கொடுமையானது இல்லையா? அதுவும் நமது தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லாத காரணத்தினால் அந்த பேறுகால மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடுஞ் சம்பவத்திற்குத் தான் மாநில மனித உரிமை ஆணையம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
 

இருபத்தி நான்கு மணி நேரம் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிவருகிறார் ஆனால் உண்மை என்ன இந்த சம்பவத்தை பார்ப்போம்.
 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயி கவுண்டன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ. விசைத்தறி தொழிலாளியான இவருக்கு காஞ்சனா என்ற மனைவி இருந்தார். காஞ்சனாவுக்கு வயது 23 திருமணமாகி இரண்டு வருடத்தில் கர்ப்பம் தரித்தார் காஞ்சனா. அவ்வூருக்கு அருகே உள்ள விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கிராம சுகாதார செவிலியரிடம் கர்ப்பிணியாக பதிவு செய்து கர்ப கால மருத்துவத்தை முறையாக எடுத்துக் கொண்டார் காஞ்சனா. சம்பந்தப்பட்ட செவிலியரும் காஞ்சனாவுக்கு தடுப்பூசி முதல் மருத்துவ ஆலோசனைகளும் கொடுத்தார்.

 


 

சென்ற 2019 அக்டோபர் மாத இறுதியில் ஒரு நாள் நிறை மாத கர்பிணி காஞ்சனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகே இருக்கிற விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மனைவி காஞ்சனாவை அழைத்துச் சென்றார் ராஜு. அப்போது மருத்துவமனையில் செவிலியர் சுகன்யா என்பவர் மட்டும் பணியில் இருந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்ற காஞ்சனாவுக்கு வலி அதிகமானது. அப்போது பணியில் இருக்க வேண்டிய டாக்டர் அங்கு இல்லை. ட்டூட்டி டாக்டருக்கு தகவல் கொடுத்தார் செவிலியர் சுகன்யா நிமிடங்கள் கடந்தது டாக்டர் வரவே இல்லை. அதற்குள் வயிற்றில் இருந்த சிசு வெளியே வர தொடங்கியது. குழந்தையின் தலை பகுதி மட்டுமே வெளியே வந்தது உடல் முழுக்க வெளியே வரவில்லை. துடிதுடித்தார் கர்பிணி பெண் காஞ்சனா. அதே போல் துடித்து பதறிய செவிலியர் சுகன்யா வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள திங்களுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காஞ்சனாவை கொண்டு சென்றார். அங்கும் பணியில் இருக்க வேண்டிய படுபாதக டாக்டர் ட்ரூட்டியில் இல்லை. வலி, பதட்டம், கதறல் என காஞ்சனாவோடு சேர்ந்து எல்லோரும் துடித்துக் கொண்டே அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர்.
 

அங்கு மருத்துவர் பரிசோதித்தார் பிறகு சாரி ஒரு அரை மணி நேரம் முன்பே வந்திருந்தால் தாயும் சேயும் பிழைத்திருப்பார்கள்  இருவரும் இறந்து விட்டனர் எனக் கூறி விட்டு போய் விட்டார் அந்த டாக்டர்.
 

பிரசவ வலி என்பது பிரசவ மரணமாக மாறிவிட்டது. என்ன செய்வார்கள் கதறினார்கள், கண்ணீர் விட்டார்கள், இறந்தது இறந்தது தான். பிரசவத்தின் போது தாய்-சேய் மரணம் யாரால் ஏன் நிகழ்ந்தது என வழக்கம்போல் விசாரணை நடத்தியது சுகாதார துறை. மாவட்ட அதிகாரிகள், அதில் சம்பந்தப்பட்ட செவிலியரின் அஜாக்கரிதைதான் இதற்கு காரணம் என மருத்துவர்களை காப்பாற்றி, இறுதிவரை போராடி பணி செய்த கிராம சுகாதார செவிலியரை தண்டித்தனர் சுகாதார துறை அதிகாரிகள்.

 

 

ஆனால் மாநில மனித உரிமை ஆணையம் விடவில்லை. இறந்த காஞ்சனாவின் கணவர் ராஜீ கொடுத்த மனுவின் பேரில் விசாரளை நடத்தியது. மனித உரிமை ஆணையம், அதன் தீர்ப்பை நேற்று வழங்கினார் நீதிபதி துரை ஜெயச்சந்திரன். அந்த அதிரடி தீர்ப்பு தான் சம்பந்தப்பட்ட மருத்துவரை குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.
 

ஆம், "அரசு மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது. பணியில் இருக்க வேண்டிய டாக்டர்களும் பணியில் இல்லாததுதான் தாய் - சேய் என இரண்டு உயிர்களையும் பழிவாங்கியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மனுதாரர் ராஜீவுக்கு 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு 4 வாரங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும். அதில் காஞ்சனா மரணத்திற்கு காரணமாக உள்ள அந்த மருத்துவமனையில் பணியில் இல்லாத டாக்டர் விஜயலட்சுமி என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் அவரிடம் அரசு வசூலிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் டாக்டர் விஜயலட்சுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் முறையாக பணியில் இல்லாத நான்கு டாக்டர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை உடனே செய்ய வேண்டும்" என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். 
 

அதோடு மட்டுமில்லாமல் "அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க பணியில் டாக்டர்கள் இருப்பதுடன் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி அரசு தர வேண்டும். மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் டாக்டர்களின் செல்போன் எண்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மருத்துவமனை முன்பு தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.
 

அரசு மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் 90 சதவீதம் அவர்கள் தங்களது சொந்த மருத்துவமனையில் தான் பணியில் இருக்கிறார்கள் இந்த மருத்துவர் விஜயலட்சுமி மட்டும் அப்போது பணியில் இருந்திருந்தால் தாய் - சேய் என இரண்டு உயிர்களையும் காப்பாற்ற இருக்கலாம். 
 

டாக்டர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் தான். ஆனால் காசு சம்பாதிப்பதற்காக சொந்த கிளினிக் வைத்துக்கொண்டு சம்பளம் பெறும் அரசு மருத்துவமனையை அலட்சியப்படுத்துவது அங்கு வரும் ஏழைகள், அப்பாவிகளின் உயிர்களையும் அலட்சியப் படுத்துவது போல் தான்...  
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...