Advertisment

ப்ளீஸ்... ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே... கட்சியினருக்கு திருமாவளவன் உருக்கமான கடிதம்!

thol thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி பானுமதி அவர்கள் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார்.திருமாவளவனை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரது சொந்த ஊரான அங்கனூருக்குச் சென்றனர்.

Advertisment

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் தலைவரை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும். நாம் ஒவ்வொருவரும் நம் தலைவரை உயிருக்கு உயிராக நேசிப்பதைத் தலைவர் நன்கு அறிவார். அதை நாம் நேரில் சந்தித்து தான் வெளிப்படுத்த வேண்டும் என்பது இந்த கரோனா பேரிடர் காலத்தில் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே, தோழர்கள் அங்கனூருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில் தொல்.திருமாவளவன் கட்சியினருக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில்,

என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே.. வணக்கம்.

என்னை ஆற்றுப்படுத்தும் நன்னோக்கில் என்னைத்தேடி அங்கனூருக்கு வருவது சரிதான். ஆனால், அது முற்றிலும் ஏற்புடையது அல்ல. பல மாவட்டங்களைக் கடந்துவந்து என்னைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வாறு நம்மைத் தீங்குசூழும் என்பதை நம்மால் ஊகிக்க இயலாது.

கரோனா எவ்வளவு கொடியது என்பதை அக்காவைப் பலி கொடுத்ததிலிருந்து மேலும் கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். அவர் சென்னையில் வீட்டிலேயே தான் இருந்தார். எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரைத் தேடிவந்து ஓரிருவர் சந்தித்துள்ளனர். உரிய பாதுகாப்புடன்தான் அந்தச் சந்திப்புகள் நடந்துள்ளன. ஓரிரு முறை வீட்டுக்கருகேயுள்ள பெட்டிக்கடைக்கு போனதாகச் சொன்னார். கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட எச்சரிக்கையாகச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார். ஆனாலும், அக்காவை எப்படியோ கரோனா தொற்றிக் கொண்டதே!

அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்துவிட்டதே! 'பெற்றவயிறு பற்றி எரியுதே' என்று சொல்லிச் சொல்லி, அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அம்மா மூன்றுநாட்களாக இடையறாமல் கதறும்நிலை உருவாகிவிட்டதே! சிலநேரங்களில் அவர் பித்துப் பிடித்தைப்போல நிலைகுலைந்து தடுமாறும்நிலை ஏற்பட்டுள்ளதே!

கரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணரவேண்டாமா?

யாரிடமிருந்து யாருக்கு இது தொற்றும் என்பதை எவராலும் கணித்திட இயலாதே! அறிகுறி காட்டாமலேயே பதுங்கியிருந்து தொற்றிக்கொள்ளும் கொடிய உயிர்க்கொல்லி அல்லவா இந்தக் கரோனா? மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் இனக்கொலைக் கும்பல் அல்லவா இந்தக் கரோனா கூட்டம்?

இனியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? கரோனா கூட்டத்தின் உயிர்க்குடிக்கும் பயங்கரத்திலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டாமா?

கரோனா தொற்றிக்கொண்டால் அதனை அழித்தொழிக்கும் வலிமை எதற்குமே இல்லை; யாருக்குமே இல்லை. அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி, மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான் பார்க்கமுடியும். என்ன குரூரம் இது?

நாம் சடலமான பிறகு செத்தநாயைத் தூக்கி எறிவதைப்போல அல்லவா புதைகுழியில் எறியப்படுவோம்.

தோழர்களே, தயவுகூர்ந்து இதை நெஞ்சிலே இருத்துங்கள். எனக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்க வேண்டாம். உங்களால் எனக்கு ஏதும் ஏற்பட்டுவிடும் என்பதல்ல என் அச்சம். பயணத்தின் வழியில் கரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும். மென்னியை இறுக்கும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது யார்க் கையிலும் இல்லை.

கரோனா மிகப் பயங்கரமான கொடுந்தீங்கு.

எனவே, கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை ஆற்றுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தேடிவர வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்காகவே இறைஞ்சுகிறேன். அங்கனூர் வரவேண்டாம். ப்ளீஸ்...ப்ளீஸ்..

இவ்வாறு கூறியுள்ளார்.

sister vck thol thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe