mk stalin

Advertisment

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். தி.மு.க. இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது தொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்குப் பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள “கரோனா கால டெண்டர் ஊழல்” மீது விரிவான புகாரை- ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார். “கரோனா கால ஊழல்”, “கரோனா தோல்வி” ஆகியவற்றை மூடிமறைக்க- குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப” வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. “எடப்பாடி” போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது.

Advertisment

“கரோனா கால ஊழல்களையும்”, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கரோனாவைத் தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து, “அதோகதியாக” நிற்பதையும் மக்கள் மன்றத்திலிருந்து எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் மறைத்திடவும் முடியாது- அதற்கான தார்மீகப் பொறுப்புகளிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்!

மேலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட - திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது- சட்டவிரோத - ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளைக் கழகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொ.ம.தே.கட்சியின் ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின்தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலளார்கள், நாடாளுமன்றஉறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் எனது தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

http://onelink.to/nknapp

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்ட விரோத, ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.