
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன், நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.