Skip to main content

“என் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” - டி.கே.சிவக்குமார்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

DK Sivakumar says I will quit politics if Kumaraswamy proves his allegations

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 68,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதனிடையே, ,வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

 

இந்த நிலையில்,குமாரசாமி நேற்று (21-11-23) போஸ்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கர்நாடகாவில் ஆபாச படங்களை திரையிட்டவரை தான் ஆட்சி அதிகாரத்தில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், இந்த மாதிரி ஆட்களிடம் தான் அதிகாரத்தை கொடுத்துள்ளது.  இது போன்ற படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால் இப்படி தான் போஸ்டர்களை ஒட்டுவார்கள்” என விமர்சித்து குற்றம் சாட்டினார்.

 

குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “குமாரசாமியை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனது தொகுதி கனகபுராவிற்கு சென்று நான் ஆபாச படங்களை திரையிட்டேனா? என்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி அங்கு யாராவது, நான் அந்த மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னாலோ அல்லது குமாரசாமி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபித்தாலோ நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. அவரது தரத்திற்கு இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு தான் அவமானம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்து கோவில்களுக்கு 10% வரி; எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The BJP protested for 10% tax on temples in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளைப் பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து கர்நாடக சட்டப்பேரவையில், அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் ‘கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நேற்று முன் தினம் (21-02-24) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, கோவிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோவில்கள் 10% வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்கள் 5% வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு, கர்நாடகா பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “ஆளும் காங்கிரஸ் அரசு இந்து விரோதக் கொள்கைகளைக் கடைபிடித்து, தற்போது இந்து கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது.

கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கையை, கோவில் திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிடுகிறது. அப்படி வரி வசூல் செய்வதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஏன் இந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். 

Next Story

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு; அதிரடி சட்டம் நிறைவேற்றம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Implementation of Action Act for New regulation of cigarette sales in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாத பொருளாக மாறி வருகிறது. 

அதே சமயம், கர்நாடகா மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து, சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்தும் கர்நாடகா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவை, நேற்று (21-02-24) கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன் பின் அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறினால் ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நடமாடும் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹூக்கா’ பார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திருத்த மசோதா, கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.