daw

Advertisment

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளைஞர் தஷ்வந்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

ஆனால், தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 90 நாட்களில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.

Advertisment

இதையடுத்து, தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது.

இந்தநிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்படுவதற்காக தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். தீர்ப்பு வாசிக்கப்படும் போது, வழக்கில் தொடர்பில்லாதவர்களுக்கு நீதிமன்றத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டு கதவுகள் மூடப்பட்டன.

Advertisment

இந்நிலையில் தற்போது, குற்றவாளி தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டு கதறி அழுதார் சிறுமி ஹாசினியின் தந்தை.