Skip to main content

சிபிஎம்மின் புதிய தமிழ்மாநிலச்செயலாளர்  - போராளி தோழர் கே. பாலகிருஷ்ணன்!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
cpm balakrishnan

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

 

தோழர் கே.பாலகிருஷ்ணன்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970ம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். 1972ம் ஆண்டில் மாணவர் உரிமைக்கான போராட்டத்தில் பல்கலை நிர்வாகத்தின் தூண்டுதலோடு கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இதனால் பல்கலைக்கழகம்  இவரை நீக்கியது. 1973ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர். 

 

1975ம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கட்சி பணிகளை நிறைவேற்றினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில / மாவட்ட பொறுப்புகளிலிருந்து பணியாற்றியதை தொடர்ந்து 1989ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 1982ம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் கே. பாலகிருஷ்ணன் 1998ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2012ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர். சட்டப்பேரவையில் கட்சியின் கொறடாகவும் செயல்பட்டார். 

 

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்று பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 

 

சிதம்பரம் பத்மினி காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு போராடியவர். நீதிமன்றத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர். இதுபோல் மாநில பொறுப்புகளில் இருந்த போது கட்சியின் போராட்டங்களிலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திலும் முன்னின்ற சிறந்த போராளி தோழர் கே. பாலகிருஷ்ணன். 

 

தோழர் கே. பாலகிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டவர். அவரது மனைவி தோழர் பா. ஜான்சிராணி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குடும்பத்தைச் சார்ந்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

சார்ந்த செய்திகள்