court condemns on We don't trust Gujarat government for Fire incident

Advertisment

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள டிஆர்பி கேமிங் ஷோன் என்ற தனியார் விளையாட்டு மைதானத்தில் இருந்த தற்காலிக கூடாரத்தில் நேற்று (26-05-24) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் கூடாரத்திலிருந்த தீயானது மைதானத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தற்பொழுது வரை இந்த விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உட்பட தேவையான அனுமதிஇல்லாமல், விளையாட்டு அரங்கம் 24 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வந்ததாக தெரியவந்தது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகும்படி உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக இன்று (27-05-24) உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிமன்றம், ‘விளையாட்டு மைதானம் இரண்டரை ஆண்டுகளாக முறையான அனுமதியின்றி இயங்கி வருவதில் மாநில அரசு கண்மூடித்தனமாக இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். மாநில அரசும், அதை பின்பற்றுவர்களும் என்ன செய்கிறது?. மாநில அரசு தூங்கிவிட்டதா? இப்போது நாங்கள் உள்ளூர் அமைப்பையும், மாநில அரசையும் நம்பவில்லை’ என்று கூறி கண்டனம் தெரிவித்தது.