ttv

Advertisment

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தை பெற்று, களம் கண்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இரு அணிகளாக இருந்த சமயத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் , குக்கர் சின்னத்தையும் தனக்கு அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு மீதான விசாரணையில், உள்ளாட்சி தேர்தல்களில் மாநில தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து அந்தப் பெயரை பயன்படுத்த அனுமதிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம் உண்டு என தினகரன் தரப்பு வாதிட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரன் கட்சிக்கு பரிந்துரைத்த 3 பெயர்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளது.