கடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த 2023 ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. ஆரம்பக் கட்டத்தில் இந்த கூட்டணிக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்த நிலையில், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

இதனையடுத்து கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸிடம் இருந்து விலகியே சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இது இந்தியா கூட்டணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகியோர் மகா விகாஸ் அகாடி கூட்டணி என்ற பெயரில் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிட்டன. மொத்தமுள்ள 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற இடங்களில், மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 46 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் தனித்து 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்ததால் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதன் எதிரொலியாக வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தனித்துப் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் நேற்று (30-06-25) ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், முன்னாள் மாநிலத் தலைவர் நானா படோல் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் மாநிலத்தில் காங்கிரஸ் ஓரங்கட்டப்படும் அபாயம் இருப்பதால் வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சித் தேர்தல், இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 227 இடங்கள் கொண்ட மும்பை மாநகராட்சித் இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு 31 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த காங்கிரஸ், வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாகக் கூறப்படுகிறது.