Advertisment

தள்ளுமுள்ளுவில் களேபரமான நாடாளுமன்றம்; பா.ஜ.க எம்.பிக்கள் மீது காங்கிரஸ் புகார்!

Congress complains about BJP MP at parliament

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.

Advertisment

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.12.2024) போராட்டம் நடத்தினர். அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (19.12.2024) மீண்டும் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் நீல நிற ஆடைகள் அணிந்து போராட்டம் நடத்தினர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமரியாதை செய்திருக்கிறது என்று கூறி பா.ஜ.கவினரும் ஒரு பக்கம் போட்டிப்போட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். இந்த தள்ளுமுள்ளுவில், காயமடைந்த பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி இதற்கு காரணம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

Congress complains about BJP MP at parliament

இந்த குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது, “இது தொடர்பான காட்சி கேமராவில் இருக்கலாம். நான் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றபோது, ​​பா.ஜ.க. எம்.பி.,க்கள் என்னை தடுத்து, தள்ளிவிட்டு, மிரட்டல் விடுத்தனர். அதனால் மல்லிகார்ஜுன் கார்கே தள்ளப்பட்டார். இதனால் இந்த சம்பவம் நடந்தது. இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது என பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் அரசியல் சாசனத்தைத் தாக்குவதும், அம்பேத்கரின் நினைவை அவமதிப்பதும்தான் மையப் பிரச்சினை” எனத் தெரிவித்தார். இதனால், நாடாளுமன்றத்தில் களேபரமானது.

இந்த நிலையில், தன் மீது பா.ஜ.க எம்.பிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் அளித்துள்ளார். அவர் எழுதிய அந்த புகாரில், ‘நாடாளுமன்ற நுழைவு வாயிலை ஆளும் கூட்டணி கட்சியினர் தடுத்து நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கால்முட்டியில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பலவீனமாக உள்ளேன். இந்த சமயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தள்ளுமுள்ளுவின் காரணமாக, காயம் ஏற்பட்டு கடினமாக நிலையில் மாநிலங்களவைக்கு நடந்து சென்றேன். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, காங்கிரஸ் தலைவரின் இந்த புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தவுள்ளது.

ambedkar AmitShah Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe