ADVERTISEMENT

தொகுதிவாசிகளுக்குத்தான் சீட்! - ராகுல்காந்திக்கு போகும் புகார்கள்!

03:55 PM Feb 19, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத பலரும் சீட் வாங்கி விடுகின்றனர். இதனால் காலம் காலமாக உழைத்த தொண்டர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் படைத்த பலரும் சீட் வாங்கி விடுவதால், உழைக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கு சீட் கிடைப்பதே இல்லை என்கிற குரல் தமிழக காங்கிரசில் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அப்படி நடந்து விடக்கூடாது என இப்போதே டெல்லி தலைமைக்குப் புகார்களை அனுப்பி வருகிறார்கள் உண்மையான கதர்ச்சட்டை தொண்டர்கள். குறிப்பாக, தமிழக காங்கிரசில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சில முக்கிய விசயங்களைப் பின்பற்ற வேண்டும் என கோஷ்டி அரசியலில் சிக்காத கதர்ச்சட்டை நிர்வாகிகள், ராகுல் காந்திக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.

அதாவது, ’’தொகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை சீட் வழங்க வேண்டும். மாவட்டம் மாறி, தொகுதி மாறி சீட்டு கேட்பவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது. கட்சியின் தலைவராக இருந்தாலும் இந்த நடைமுறையைக் கடைப்பிடியுங்கள்.

திமுக கூட்டணியில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் கேட்டு வாங்குங்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் சம்மந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்தவரையே வேட்பாளராகத் தேர்வு செய்ய வேண்டும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சம்மந்தப்பட்டவரின் பெயர் இருப்பதோடு, சம்மந்தப்பட்டவர் தொகுதியிலேயே வசித்தவராக, வசிப்பவராக இருப்பது அவசியம். தொகுதி மாறியோ, மாவட்டம் மாறியோ சீட்டுகள் யாருக்கும் ஒதுக்கக்கூடாது.

அப்படி ஒதுக்கினால், தொகுதிமாறி நிற்கும் நபரால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தலில் மண்ணின் மைந்தர்களைத்தான் வாக்காளர்கள் தேடுகிறார்கள். அதனால், இந்த ஒரு முறையாவது தொகுதியில் வசிப்பவர்களுக்கு சீட் வழங்குங்கள்‘’ என்று சோனியாவுக்கும் ராகுலுக்கும் மெசேஜ் பாஸ் செய்துள்ளனர் கோஷ்டிகளில் சிக்காத காங்கிரஸ் தொண்டர்கள்.

’’இந்த குரல் நியாயமானதுதான். ஆனால் கட்சியில் உள்ள சாமானியர்களின் குரலை எங்கள் மேலிடம் பரிசீலிக்குமா, என்ன?’’ என்கிறார் முன்னாள் தலைவர் ஒருவர் நம்மிடம் நமட்டுச் சிரிப்புடன்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT