Advertisment

ஜெ. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகாரை தயாரித்தவர் பி.எச். பாண்டியன் தான்: கே.எஸ்.அழகிரி

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகாரை தயாரித்தவர் இன்று அ.தி.மு.க.வில் இருக்கிற பி.எச். பாண்டியன் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த ஊழல் புகார் அளித்ததில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஊழல் ஆட்சிக்கு எதிராக நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற வகையில் அவதூறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் ஊழல் புகார் கொடுத்து, வழக்கு தொடுத்தது தான் காரணம் என்று அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

ops-eps-phpandiyan

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் குறித்து அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் ஊழல் புகார் அளித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஊழல் புகாரில் கையொப்பமிட்டவர்கள் சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம், முன்னாள் தமிழக அமைச்சர் சு. திருநாவுக்கரசர், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் ஆகியோர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஊழல் புகாரை தயாரித்தவர் இன்று அ.தி.மு.க.வில் இருக்கிற பி.எச். பாண்டியன் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த ஊழல் புகார் அளித்ததில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. இந்நிலையில் ஊழல் புகார் அளித்து வழக்கு தொடுத்தது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், இதில் ஆதாரங்களை திரட்டி உதவி செய்தது ப. சிதம்பரம் என்று கூறுவது அப்பட்டமான அவதூறு குற்றச்சாட்டு ஆகும். இந்த ஊழல் புகாரின் அடிப்படையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்கு தொடுப்பதற்கு ஆளுநர் சென்னா ரெட்டியிடம் தீவிரமாக முறையிட்டவர் சுப்பிரமணிய சுவாமி தான். இத்தகைய உண்மைப் பின்னணியை மூடிமறைக்கிற வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Advertisment

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது துறைகளை பொறுப்பேற்று கவனித்து வந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவரது மறைவிற்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றவரும் அவரே. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவர் கூறிய கருத்துக்களை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் ஒருமுறை கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நாள்தோறும் மருத்துவமனைக்குச் சென்று பலமணி நேரம் காத்திருந்தும் ஜெயலலிதாவை பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரிப்பதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்று தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ. பன்னீர்செல்வம். அவர் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறும் போது, ‘ஒரு மனநோயாளி போல ஓ. பன்னீர்செல்வம் பேசி வருகிறார்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் சசிகலா முதலமைச்சர் பதவி ஏற்கப்படுவது உச்சநீதிமன்ற ஆணையினால் தடுக்கப்பட்ட பிறகு, ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தார்கள். முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவிகளை பகிர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஆறுமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ. பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு முன்வராதது ஏன் ? இந்நிலையில் தேவையில்லாமல் ஜெயலலிதாவின் மறைவிற்கு தி.மு. கழக தலைவர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் தான் காரணம் என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம்; வாக்காளப் பெருமக்களை ஏமாற்ற முடியாது.

ks

இந்த ஊழல் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு இறுதியாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. உண்மை நிலை இவ்வாறிருக்க பொய் வழக்கு போட்டு, தண்டனை பெற்று மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக கூறுவது ஒரு முதலமைச்சரின் பொறுப்பற்றதனத்தைத் தான் காட்டுகிறது. இதன்மூலம் முதலமைச்சருக்கு சட்டத்தைப் பற்றியும், நீதிமன்றத்தைப் பற்றியும் அறியாமையில் பேசுகிறாரா ? வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழியை போட்டு திசைத் திருப்பி, வாக்காளப் பெருமக்களை ஏமாற்ற முனைகிறாரா ? எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு தான் ஆத்திரம் பொங்க குற்றச்சாட்டு கூறினாலும், உண்மைகளை மூடி மறைத்திட முடியாது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் கூறவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

congress ksalakiri Speech Edappadi Palanisamy P. H. Pandian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe