பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான மெகா பணமோசடியில் ஈடுபட்டார் வைர வியாபாரி நீரவ் மோடி. இந்த பண மோசடி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா, ‘நாங்கள் இனி இதுமாதிரியான தவறுகள் இனி நடக்க விடமாட்டோம்; அந்த புற்றுநோயை நீக்குவோம். 2011ஆம் ஆண்டில் இருந்து இந்த புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. நாங்கள் இதை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கி வருகிறோம்’ என பேசியிருந்தார்.

Advertisment

Santha

இந்நிலையில், பத்ம விபூஷன் விருது பெற்றவரும், புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவருமான சாந்தா, சுனில் மேத்தாவின் கருத்து குறித்து தனது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘புற்றுநோய் என்ற வார்த்தையை கூச்சமான, நம்பிக்கையற்ற மற்றும் பயமூட்டும் ஒன்றாக காட்டிக்கொள்ளக் கூடாது. கேவலமான, மோசமான ஒன்றோடு புற்றுநோயை நிச்சயமாக ஒப்பிட வேண்டாம். அது புற்றுநோயால் பாதிக்க்கப்பட்டுள்ளவர்களை மேலும் அச்சமூட்டும்.எனவே, புற்றுநோயை ஊழலோடு எப்போதும் இணைத்துப் பேசவேண்டாம்’ என ஆத்திரத்துடன் எழுதியிருந்தார்.

Advertisment

இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ள மருத்துவர்சாந்தா, ‘ஊழல் ஒரு கிரிமினல் குற்றம்; புற்றுநோய் அப்படி அல்ல. ஊழல் உள்நோக்கம் கொண்டிருப்பதைப் போல, புற்றுநோய் இருப்பதில்லை. எனவே, சுனில் மேத்தா தனது கூற்றைத் திரும்பப்பெறவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.