/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_86.jpg)
வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்தில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாமல் மனிதனால் இருக்க முடியாத நிலைக்குக் காலம் நம்மை அழைத்துச் சென்றுள்ளது. அப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும் செல்போனும் அதில் நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களும் நன்மையையும், தீமையையும் ஒரு சேர கொடுக்கிறது.
சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவதால் பல குற்றச்செயல்கள் நடக்கின்றன. இதில் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளத்தால் வாழ்கையை இழந்து உயிருக்குப் போராடிய நிலையில் காவல் நிலையங்கள் கைவிட்ட போதிலும் நக்கீரனின் செய்தி எதிரொலியால் சென்னை கமிஷ்னர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த பெண்னின் உயிரைக் காப்பாற்ற வழிவகை செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மீண்டும் நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண், “என் பெயர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனக்கு 23 வயது ஆகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கடந்த 2018 ஆம் ஆண்டு எனது அம்மாவும், 2019 ஆம்ஆண்டு எனது அப்பாவும் உயிரிழந்தனர். நானும் என் தங்கையும் தண்டையார்பேட்டையில் உள்ள எனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தோம். பாட்டியின் ஓய்வூதியத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவன் நட்பாகவும் பிறகு காதலிப்பதாகவும் தெரிவித்தான். என் குடும்ப சூழ்நிலையை பற்றி எடுத்துக் கூறியும் அவன் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்தான். இருவரும் காதலித்து பல இடங்களில் சுற்றித் திரிந்தோம். சிறிது நாட்களிலே தண்டையார்பேட்டையில் உள்ள அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வரத்தைக் கூறி என்னுடன் தனிமையில் இருந்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_58.jpg)
அந்த சமயத்தில் ஒருநாள் என் மாமா நாங்கள் இருவரும் சுற்றித் திரிவதை பார்த்துவிட்டு, என்னை வீட்டில் வந்து அடித்து கண்டித்தார். அவனுக்கும் போன் செய்து கண்டித்தார். இதனால் இருவரும் பிரிந்து விட்டோம். இருவரும் பேசவில்லை. எனது தங்கையின் படிப்பு மற்றும் என்னுடைய காதல் பிரச்சனை காரணமாக எனது பாட்டியுடன் தாம்பரம் பகுதியில் குடியேறினோம். அவ்வப்போது தினேஷ் என்னிடம் பேசி வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னை பாசமாக கவனிப்பதை போல இன்ஸ்டாகிராமில் பேசினான். அவன் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவள் ஏமாற்றிவிட்டுச் சென்றதாகவும் என்னிடம் கூறி வருத்தப்பட்டான். மேலும் நம் பழைய காதலை தொடரலாம் என்றும், என் வீட்டில் என் பாட்டி மற்றும் என் மாமாவுக்கு போன் செய்து நான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தான்.
மீண்டும் இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்தோம். ஒரு வாரம் நண்பர்களுடன் அவனும் நானும் கேரளாவிற்குச் சுற்றுலா சென்று இருந்தோம். மீண்டும் சென்னை வந்து ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரிசாட்களில் பல இரவுகள் அவன் என்னுடன் தனிமையில் இருந்தான். அவன் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதால் நானும் அவன் நினைப்பதை போல நடந்து கொண்டேன். இந்த நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நான்கு நாட்கள் பாண்டிச்சேரிக்குச் சென்றோம். அங்கும் என்னுடன் அவன் தனிமையில் இருந்தான். பிப்ரவரி மாதம் எனக்கு மாதவிடாய் வரவில்லை எனக்கு ஒரு சந்தேகம் இருக்கவே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
தினேஷுககு போன் செய்து தகவலை கூறினேன். அதேபோல நான் கர்ப்பமாக இருக்கும் அறிக்கையையும் அவனுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது என்னிடம் பேசிய தினேஷ் அதற்கு நான் பொறுப்பில்லை எனக் கெட்ட வார்த்தையால் கடுமையாக திட்டினான். மேலும், ‘உன்னை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..’ என்று கூறினான். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போதுதான் தினேஷின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து தினேஷின் அம்மாவிடம் பேசிய போது, அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார்.
வேறு வழியில்லை என்று தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றேன். ஆனால் அவர்களின் லிமிட் இல்லை என்று கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லும்படி கூறினார்கள். கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது, கேளம்பாக்கம் பெண் வன்கொடுமை வழக்கில் பிஸியாக இருப்பதால் திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள். இந்த நிலையில் விஷயம் தெரிந்த என் பாட்டி என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். செல்ல வேறு இடமின்றி என் தோழி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்தேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/61_77.jpg)
இந்த நிலையில் நீதிக்காக சுற்றி அலைந்ததில் எனக்கு அன்று இரவு கர்ப்பம் கலைந்து விட்டது. சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது, அதை முழுமையாக கிளீன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்றால் வழக்குப் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் காப்பி இருந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறி என்னை அனுப்பி விட்டனர். அதனால் திருவெற்றியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றேன். ஆனால் அங்கேயும் புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அப்போதும் என் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தினேஷின் தந்தை மற்றும் வழக்கறிஞரை வரவழைத்து, என்னை தரக்குறைவாக பேசினார்கள்.
காவல் ஆய்வாளர் மஞ்சுளா வரலட்சுமி வழக்குப் பதிவு செய்யாமல் மேலும் 5 நாள் என்னை அலைக்கழித்தார். எனக்கு வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே சென்றது, சிகிச்சை அளிக்க யாரும் முன் வராததால், தற்கொலை செய்து கொள்ளலாமா? என்ற அளவுக்கு எனக்கு வலி இருந்தது, எனக்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தால் தினேஷ் மற்றும் அவர் குடும்பத்தார் பணத்தை கொடுத்து வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியாமல் அலைய விட்டனர். கடைசியாக நக்கீரனில் புகார் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று நம்பி வந்தேன்.
நக்கீரனின் வலைதளத்தில் எனக்கு நடந்த கொடுமைகளை பற்றி விவரமாக செய்தி பதிவு செய்திருந்தனர். இதைப் பார்த்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் நேரடி உத்தரவால் எனக்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. நக்கீரனின் செய்தி எதிரொலியால் போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவின் பேரில் என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து எஃப் ஐ ஆர் பதியப்பட்டது. அதன் காரணமாக நான் உடனடியாக சிகிச்சை எடுத்ததால் உயிர் போகும் ஆபத்திலிருந்து நான் தப்பித்தேன். எனக்கு உதவிக் கரம் நீட்டிய நக்கீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அருணுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)