Advertisment

தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Chief Election Commissioner visits Tamil Nadu

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தமிழகம் வருகிறார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Subscribe