Skip to main content

மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம் -  17 காட்டுமிராண்டிகளுக்கும் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
rape

 

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பல மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்த 17 காட்டுமிராண்டுகளுக்கும் ஆதரவாக வழக்கஞறிர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.  


சென்னை அயனாவரத்தில் தொழிலதிபர்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள், வசதியானவர்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 செக் போஸ்டுகள், 25க்கும் மேற்பட்ட காவலாளிகள், 50 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கத்தியைக்காட்டி  மிரட்டியும், மயக்கு  ஊசி செலுத்தியும், போதை மாத்திரைகள் கொடுத்தும் கடந்த 6 மாதங்களாக 17 பேர் கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை சென்னை நகரத்தையே அதிர வைத்திருக்கிறது.

 

 சிறுமியின் உடலில் உள்ள தழும்புகள், வெட்டுக்காயங்களை கண்டு திடுக்கிட்ட சகோதரியிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி.  இதையடுத்து போலீசாரிடம் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில், மொட்டை மாடியையும், காலியாக இருந்த வீடுகளையும் சோதனையிட்டபோது ஆணுறைகள், போதை ஊசி மருந்துகள் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

 கூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள் ரவிக்குமார்(60),  முருகேசன்(54), ஜெய்கணேஷ்(23), பாபு(36), பழனி (40), தீனதயாளன்(50), அபிஷேக்(23),  சுகுமாறன்(60), இரால் பிரகாஷ்(58), ராஜா(32), சூர்யா(23), சுரேஷ்(32), ஜெயராம்(26), ராஜசேகர்(40), குணசேகர்(55), உமாபதி(42), சீனிவாசன்(45) 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் 17 பேரையும் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டபோது ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு 17 பேரையும் கடுமையாக தாக்கினர்.  போலீசாரால் சமாளிக்க முடியவில்லை.  பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.  மேலும், போலிசாரின் வலியுறுத்தலின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் பால.கனகராஜ் ஆகியோரின்  வேண்டுகோளுக்கு இணங்க வழக்கறிஞர்கள் குற்றாவாளிகளை தாக்குவதை நிறுத்தினர்.

 

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், 

’’சென்னை அயனாவரம் பகுதியில் சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் பலாத்கார கொடுமை நிகழ்ந்துள்ளது. இன்றைய தினம் குற்றவாளிகளை கைது செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.    அப்போது வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளுக்கு எதிர்ப்பை காட்டினர்.  இந்த எதிர்ப்பானது இதுவரை காணாத கடுமையான எதிர்ப்பாகும்.   ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் கூடி இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கில் ஆஜர் ஆகக்கூடாது என்று முடிவெடுத்துள்ளோம்.  இந்த முடிவானது தமிழகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும்.   


சிறிது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மன்னிக்கவே முடியாதது. 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  ஜாமின் வழங்கக்கூடாது.   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கும் ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்.    17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞராவது ஆஜர் ஆனால் அவர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்’’ என்று தெரிவித்தது அங்கே ஆத்திரத்துடன் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

 

சார்ந்த செய்திகள்