Advertisment

டெல்லியை வலிக்காமல் அடித்து, தமிழகத்தை வயிற்றில் அடிக்கும் உச்சநீதிமன்றம்! ராமதாஸ்

Supreme Court

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், டெல்லியை வலிக்காமல் அடித்து, தமிழகத்தை வயிற்றில் அடிக்கிறது உச்சநீதிமன்றம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

Advertisment

தனது டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் ஒரு கேள்வி ஒரு பதில் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

Advertisment

கேள்வி: காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆணையிட்டிருக்கிறாரே. அடுத்து என்ன நடக்கும்?

பதில்: உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, ‘‘ உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாம் அனைவரும் நடிகர்கள்’’ என்ற ஷேக்ஸ்பியரின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணக்கு வந்த போது, ‘‘ பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல’’ மத்திய அரசு வழக்கறிஞரிடம் மத்திய அரசுக்கு சாதகமாகவும், தமிழக அரசு வழக்கறிஞரிடம் தமிழக அரசுக்கு சாதகமாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் குழப்பம் தீர்வதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. இதனால் தீர்வு கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16&ஆம் தேதி அளித்தத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மற்றொருபுரம் உச்சநீதிமன்ற நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக மத்திய அரசு விளக்கம் கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நீங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். அந்த உத்தரவுக்கு நீங்கள் பணிந்திருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நன்றாக ஆராய்ந்து நாங்கள் தீர்ப்பளித்திருக்கிறோம். ஆனால், காவிரிப் பிரச்சினையில் தீர்வு காணும் உறுதியை நீங்கள் காட்டவில்லை’’ என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுவரை நீதிமன்றத்தில் அனைத்தும் நன்றாகவே நடந்தது. அதன்பின்னர் நடந்த நிகழ்வுகள் ஐயத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

KRs

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை குறிப்பிட்டக் காலத்திற்குள் அமைக்காததற்காக மத்திய அரசைக் கண்டித்த நீதிபதிகள், அதற்குப் பிறகும் மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்திருக்கக் கூடாது. மாறாக, நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உச்சநீதிமன்றமே உருவாக்கி இதை 4 நாட்களில் செயல்படுத்துங்கள் என்று கூறியிருக்கலாம். இவ்வாறு உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவிட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவ்வளவு ஏன்? கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வு ஆணையிட்டிருக்கிறது.

ஆனால், நீதிபதிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தின் வரைவை தயாரித்து மே 3&ஆம் தேதி எங்களிம் தாக்கல் செய்யுங்கள் என்று ஆணையிட்டுள்ளனர். அவ்வாறு தாக்கல் செய்தாலும் கூட அதை உடனடியாக செயல்படுத்த ஆணையிட மாட்டார்களாம். மாறாக அதை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களிடம் கொடுத்து கருத்துக் கேட்பார்களாம். அதன்பிறகே இவ்விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்களாம். இது என்ன கொடுமை?

Cauvery

காவிரி செயல்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் திரும்பத் திரும்பக் கேட்ட போது, காவிரி மேலாண்மை வாரியம் தான் செயல்திட்டம் என தலைமை நீதிபதி கூறிவிட்டார். அதன்பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்று, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பின் வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று கேட்ட போது, ‘‘ அனைத்தையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார். அந்த அமைப்பு தொழில்நுட்ப அமைப்பாக இருக்க வேண்டுமா? நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டுமா? என்று கேட்ட போது,‘‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் தீர்ப்பை நீங்கள் செயல்படுத்துங்கள்’’ என்று கூறிவிட்டனர். கூடவே நடுவர் மன்றத் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; எங்கள் தீர்ப்பு தான் முக்கியம்’’ என்றும் கூறிவிட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விளக்கம் கோரும் மனு மீதான ஆணையிலேயே இத்தனைக் குழப்பங்கள் இருக்கும் போது எவ்வாறு தீர்வு ஏற்படும்?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்தியில் ஆளும் கட்சிக்கு கர்நாடக அரசியலில் லாபம் தேடித் தரும் வகையில் தான் அமைந்துள்ளது. அடுத்ததாக, எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி அதுகுறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் வரும் 3&ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யும். அந்த அமைப்பு கர்நாடகத்துக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் இருக்கும். இது குறித்த செய்திகள் பிரமாண்டமாக்கப்படும். கர்நாடகத்தின் உரிமைகளை மத்திய பாரதிய ஜனதா அரசு காப்பாற்றி விட்டதாக தோற்றம் ஏற்படுத்தப்படும். மத்திய அரசுக்கு எதிராக தமிழகமும் பொங்கி எழும். இந்த மாயத்தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு மே 12&ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாரதிய ஜனதா முயலும்.

ramadoss

அதன்பின் கோடை விடுமுறை முடிந்து ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும். இடைப்பட்ட காலத்தில் குறுவை சாகுபடிக்கு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. ஆனால், உச்சநீதிமன்றத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் சாதக, பாதகங்கள் குறித்த வாதங்கள் தொடக்கத்திலிருந்து நடத்தப்படும். தமிழக அரசின் சார்பில் திறமையில்லாத வழக்கறிஞர்கள் சொதப்புவர். மணல் கொள்ளை சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு தில்லி சென்று தவம் கிடக்கும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த வழக்குக்காக எதையும் செய்ய மாட்டார். அதற்குள் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வந்து விடும். அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் நாள். அதற்குள் வழக்கு விசாரணை முடிந்திருந்தால் அவர் தீர்ப்பளிப்பார். இல்லாவிட்டால் புதிய அமர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும். அது இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படும்.

அதற்குள் இன்னும் பல ஆண்டுகளுக்கு குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், கடன் வாங்கி பயிரிட்ட சம்பா பயிர்கள் கருகுவதாலும் பாதிக்கப்பட்டு கடனாளி ஆகும் விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டோ, தூக்கு மாட்டியோ உயிரை விடுவார்கள். அடிமைகளும், பினாமிகளும் ஆட்சி செய்தால் இது தானேற் நடக்கும். மத்திய அரசை கண்டிப்பது போல வலிக்காமல் அடித்தும், நம்மை வயிற்றில் கொடூரமாக அடித்தும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

வாய்மையே வெல்லட்டும்!

இவ்வாறு கூறியுள்ளார்.

Answer Cauvery management board judgement Ramadoss Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe