BJP MP joined the Congress party 

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரிஜேந்திர சிங் ஆவார். இவர் இன்று (10.03.2024) பா.ஜ.க.வில் இருந்து விலகினர். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து பிரிஜேந்திர சிங் கூறுகையில், “அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகினேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிவிட்டேன்” எனத் தெரிவித்தார். பா.ஜ.க. எம்.பி ஒருவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.