Skip to main content

போர் தொடுப்பது அவ்வளவு எளிதா? 

 

ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் என்று மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். இதெல்லாம் மக்களுடைய ஆத்திரத்தை உசுப்பேத்தவும், அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றவும் மட்டுமே உதவும். நிஜத்தில் 2017 ஆம் ஆண்டு எல்லையோரத்தில் இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைத்த கொடூரத்துக்கே மோடி அரசு பதிலடி கொடுக்கவில்லை.

 

மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் எப்போதுமில்லாத வெற்றியை 2014ல் பாஜகவுக்கு கொடுத்தார்கள். அங்கு கூட்டணி அரசு அமைத்தது பாஜக. அதன்பிறகு என்ன நடந்தது? அப்புறம்தான் காஷ்மீர் படுமோசமான வன்முறைக் களமாக மாறியிருக்கிறது.

 

ay

 

இஸ்லாமிய இளைஞர்களை பாரபட்சமின்றி காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய் தீவிரவாத முத்திரை குத்தும் முயற்சி தீவிரமடைந்தது. இதை கண்டித்த போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் மீது பெல்லட் குண்டுத் தாக்குதலை தொடுத்து சிறு குழந்தைகள்கூட பாதிக்கப்பட்டனர்.

 

அதைத்தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மீது கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளுமே தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்தது. பாஜகவின் நோக்கம் காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையை வளர்த்து, அவர்களை இந்தியாவோடு இணக்கமாக வைத்திருப்பது அல்ல என்றே மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள்.

 

மிகக்குறிப்பாக, பாகிஸ்தான் வசம் இருக்கிற காஷ்மீர் பகுதிக்கு, இங்கிருக்கிற முஸ்லிம்களை அனுப்புவதே பாஜகவின் நோக்கம் என்று வெளிப்படையாகவே மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் இருந்து முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விரட்டிவிட்டு, அவர்களுடைய சொத்து சுகங்களை காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு கொடுப்பதே பாஜகவின் இலக்கு என்று கருதும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினர் மற்றும் பாஜகவினரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

 

மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகுதான் காஷ்மீரில் மிகக்குறைவான வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவில் எல்லையோர உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளன. மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த நாலேமுக்கால் ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அப்போதெல்லாம் மோடி இப்படி ஆவேசமாக பேசியதில்லை. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால், ஆட்சி முடியப்போகிற நிலையில் வழக்கத்திற்கு மாறான இந்திய வீரர்களின் அணிவகுப்பை எல்லைப் பகுதியில் நடத்தி, 42 வீரர்களின் இன்னுயிரை பறித்திருக்கிறது மத்திய அரசு.

 

பயங்கரவாத தாக்குதலில் பலியான சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை ஒரே சமயத்தில் 70 வாகனங்களில் அணிவகுக்கச் செய்தது ஏன் என்று வினா எழுப்பியிருக்கிறார். இதுவரை இப்படி அணிவகுக்கச் செய்தது இல்லை என்றும் இதில் சதி இருப்பதாகவும் அவர் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

 

அதைக்காட்டிலும் பாதுகாப்பு செயற்கைக் கோள்கள் இத்தனை இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார். தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, உளவுத்துறை சார்பில் மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. வெடிமருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ay

 

தாக்குதல் நடத்தப்போவதை சம்பந்தப்பட்ட ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பும் சூசகமாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகு இப்படி ஒரு மோசமான தாக்குதலை அனுமதித்தது யார் என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழும் என்பதை மோடி திசை திருப்பப்பார்க்கிறார்.

 

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கிளப்பி விடுகிறார்கள். அவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உலக அளவில் போர்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களுடைய நோக்கம், வெற்று வெறியை உருவாக்கி தேர்தலில் அதை பயன்படுத்துவதே. உண்மையில் போர் தொடுத்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதையெல்லாம் மறந்து பேசுகிறவர்களின் அறியாமையை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.

 

இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை அதிக அளவில் வைத்திருக்கின்றன. இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் அதிகமாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய நாடுகளும் அதிகம் என்ற நடைமுறை உண்மைகளையெல்லாம் அறியாமல் பேசுகிறார்களா? அறிந்தாலும் இப்போதைக்கு மோடி அரசின் தோல்வியை மடைமாற்றும் நோக்கத்தில் வெறியேற்றி பேசுகிறார்களா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

 

பாகிஸ்தானுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மட்டுமே வெறுப்புணர்வை வளர்த்து, அந்த வெறுப்புணர்வையே தனக்கு வாக்குகளாக மாற்றுவதுதான் பாஜகவின் ஒரே தந்திரம். பாஜகவைத் தவிர இந்தியர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானை சகோதர நாடாக பாவித்து, ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். பூமியின் சொர்க்கம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் மீண்டும் பெறவேண்டும் என்பதே பெரும்பான்மை இந்தியரின் விருப்பம். பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொண்டு, இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுத்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படைத் தன்மையை காப்போம் என்று சூளுரைப்பதே இந்தியர்களின் கடமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்