Skip to main content

பாஜக, காங்கிரஸுக்கு டாடா சொன்ன டெல்லி... மீண்டும் கெத்து காட்டிய கெஜ்ரிவால்...


 

வளர்ச்சியின் நாயகன் என்றும் அசைக்க முடியாத பிரதமர் என்றும் தினமும் பாஜகவினர் கூறிவந்த நிலையில், 6 ஆண்டுகள் ஆட்சிசெய்த இந்தியாவின் தலைநகரத்து மக்கள் பாஜகவை பொடிப்பொடியாக சிதைத்திருக்கிறார்கள். அத்துடன் அற்புதங்களை நிகழ்த்துபவராக அடிக்கடி வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவையும் நோகடித்திருக்கிறார்கள்.

 

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி பலத்த அடிவாங்கியிருக்கிறது. இனி தமிழ்நாட்டைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் எழுந்திருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது.

 

modi-aravind-rahulமூன்றாவது முறையாக முதல்வராகப் போகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். 2013 ஆம் ஆண்டு முதன்முதல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போட்டியிட்டது. தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிரான வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக நினைத்திருந்தது. ஆனால், டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு 28 இடங்களையும் பாஜகவுக்கு 31 இடங்களையும், காங்கிரஸுக்கு 8 எட்டு இடங்களையும், மற்றவர்களுக்கு 3 இடங்களையும் கொடுத்தார்கள்.

 

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டி அரசாங்கத்தை அமைத்தார் கெஜ்ரிவால். ஆனால், லோக்பால் மசோதாவை அவையில் தாக்கல் செய்தபோது பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக எதிர்த்தன. அம்பானிக்கு எதிராக கெஜ்ரிவால் செயல்படுவதை தடுக்க இரண்டு கட்சிகளுமே பேரவையில் தடங்கலை ஏற்படுத்தின.

 

எனவே, 2013 டிசம்பரில் முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால், 2014 பிப்ரவரி 14 ஆம் தேதி தனது அரசை கலைக்கும்படி ஆளுநரிடம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ஒரு ஆண்டுவரை டெல்லியில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.

 

அதன்பிறகு 2015 ஜனவரியில் டெல்லி பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஆம் ஆத்மி 70க்கு 67 இடங்களை கைப்பற்றியது. பாஜக வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸுக்கு 1 இடம்கூட கிடைக்கவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 1 ஆண்டில் தலைநகர் டெல்லியில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது.

 அந்த வெற்றிக்கு ஆம் ஆத்மி அறிவித்திருந்த வாக்குறுதிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. காங்கிரஸுக்கு மாற்றாக மதசார்பற்ற அரசு ஒன்றை மக்கள் விரும்பினார்கள். மாற்று கட்சி கிடைத்தவுடன் அதற்கு அவர்கள் வாக்களித்தார்கள் என்றும் கூறினார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த டெல்லியில், பாஜக வந்துவிடக்கூடாது என்று இஸ்லாமியர்களும், காங்கிரஸாரும் இணைந்து ஆம் ஆத்மிக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. கிட்டத்தட்ட ஸ்வீப் என்ற அளவுக்கு பெரும்பான்மை பெற்ற கெஜ்ரிவால் 1914 பிப்ரவரி 14 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

 

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும், ஆம் ஆத்மி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியது. ஆட்டோ டிரைவர்களுக்கு சலுகை காட்டியது. மருத்துவமனைகளையும் அரசுப் பள்ளிகளையும் சீரமைத்தது. முதியோருக்கும் பெண்களுக்கும் உயர்ரக மருந்துகளுடன் சுகாதார வசதியை வீ்ட்டுக்கே கொண்டு சென்று இலவசமாக அளித்தது. குறிப்பாக மின்சார கட்டணத்தை வெகுவாக குறைத்தது.

 

டெல்லி அரசின் செயல்பாடுகளை தடுக்க பாஜக பல்வேறு தடைகளை போட்டது. டெல்லி போலீஸ் அதிகாரத்தை மாநில அரசுக்கு கொடுக்க மறுத்தது. எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் துணை நிலை ஆளுநரைக் கொண்டு தடைபோட்டது.

 அப்படி இருந்தும் இந்தத் தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அலை வீசுவதாக கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. அதையடுத்து, பாஜகவின் மத்திய அமைச்சர்கள் 70 பேரும், 270 எம்.பி.க்களும் முக்கிய தலைவர்களும், பாஜகவின் 7 மாநில முதல்வர்களும், 40 நட்சத்திர பிரச்சாரகர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு முந்தின நாட்களில் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் 375 எம்.பி.க்கள் பண மூட்டைகளுடன் கேம்ப் அடித்தார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா 48 பொதுக்கூட்டங்களை நடத்தினார். பேரணிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி 10 பேரணி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். மொத்தத்தில் ஒரு மாநகராட்சி அளவுக்கான டெல்லியில் பாஜக சார்பில் 5 ஆயிரம் பிரச்சார பேரணிகள் நடத்தப்பட்டன.

 

இதைத்தவிர, தனக்கு சாதகமான தேர்தல் ஆணையத்தை பாஜக உதவிக்கு வைத்திருந்தது. தனது எடுபிடியாக உள்ள சிபிஐயைக் கொண்டு, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் ரெய்டுகளை நடத்த பாஜக உத்தரவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரியாணியும் மதுவும் தாராளமாக வழங்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் மீறி, ஆம் ஆத்மி கடந்த முறைபெற்ற வெற்றிக்கு நிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியும்கூட பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணம் தனது மக்கள்விரோத மதவாத செயல்திட்டம்தான் என்பதை உணர்ந்து பாஜக திருந்துமா? மாறாக, இருக்கும் காலத்திற்குள் இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு பின்னே தள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.