Advertisment

“எனக்கு நானே கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்” - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Bihar Chief Minister Nitish Kumar says I condemn myself

Advertisment

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசால் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) வெளியிடப்பட்டது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (07.11.2023) வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாகவும் உயர்த்த பரிந்துரை செய்கிறேன்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இருப்பது சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 7 சதவீத பட்டதாரிகள், ஓபிசி பிரிவில் யாதவ் உள்ளிட்ட சமூகத்தினர் ஏழைகளாக இருப்பது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர், தாம்பத்திய உறவில் கணவன்மார்களின் செயல்களால் தான் குழந்தை பிறப்பு அதிகரிக்கிறது. படித்த பெண்ணாக இருந்தால் கணவனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியும். தற்போது கல்வி பெற்ற பெண்கள் அதிகரித்து வருவதால் பாலியல் குறித்து விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு படித்த பெண்களின் விழிப்புணர்வே பிரதான காரணம். இதனால், குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisment

இதையடுத்து, நிதிஷ்குமாரின் பேச்சு சர்ச்சையானது. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் நேற்று (08-11-23) பீகார் சட்டசபைக்கு வந்த நிதிஷ்குமார் வெளியே நின்ற செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பெண்களை பற்றிய தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அதனை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் சட்டசபைக்கு சென்றபோது பா.ஜ.க உறுப்பினர்கள் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும், அதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் எழுந்து நின்று, ‘நிதிஷ்குமாருக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது. அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு தகுதி இல்லை. அதனால், அவர் பதவி விலக வேண்டும்’ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நிதிஷ்குமார், “சட்டசபைக்கு வெளியே நின்ற செய்தியாளர்களிடம் பேசும்போது நான் வருத்தம் தெரிவித்தேன். மறுபடியும் அதையே செய்ய தயாராக இருக்கிறேன். எனது வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், எனக்கு நானே கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் பெண் கல்விக்கு ஆதரவானவன். பெண் கல்விக்கும், கருத்தரிப்புக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்ததால் தான் அக்கருத்தை தெரிவித்தேன்” என்று பேசினார்.

Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe