Bahrain recall envoy to Israel

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 31 ஆம் தேதி, பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை தெரிவித்துள்ளது. மேலும், அதில் இஸ்ரேல் நாட்டுடனான பொருளாதார உறவுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றம், ‘பாலஸ்தீனிய பிரச்சனை மற்றும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளுக்கும் ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்’ என்று கூறியுள்ளது.