/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Karur DMK_col.jpg)
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பழகனை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், திமுக சார்பில் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் கோரிக்கையை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறது திமுக. பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சக்திக்குட்பட்டு முடிந்தவரை நிறைவேற்ற இரவும், பகலும் அயராது உழைத்து வரும் நிலையில், அவர்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிறோம்.
அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான என்னையும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினரான ராமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரை அழைக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை கேட்டால், மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பக்குவம் இல்லாமல் அவர்இருக்கின்றார். இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் எங்கும் வெளியில் போக முடியாது என்று எச்சரிக்கையாக சொல்கிறேன் என்றார்.
Follow Us