APAAR card is mandatory for students appearing for NEET exam

ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்று மாணவர்களுக்காக ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே கொண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து ‘ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி’ என்ற திட்டத்தின் கீழ் ‘அபார் அட்டையை’ மத்திய அரசின்கீழ் இயங்கக்கூடிய தேசிய தேர்வு முகமை கொண்டு வந்துள்ளது. பொதுமக்களுக்கான ஆதார் அட்டையைப் போலவே, நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் ‘அபார்’ அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாதைகளை தேர்ந்தெடுக்க அதிகாரம் அளிக்கவும், மாணவர்களின் சாதனை விவரங்கள் என அனைத்து விவரங்களும் சேமிப்பதற்காக இந்த அபார் அட்டையை தேசிய தேர்வு முகமை கொண்டு வந்துள்ளது. இந்த அட்டையின் மூலம், பள்ளி இடமாற்றங்கள், நுழைவுத் தேர்வுகள், சேர்க்கைகள், வேலை விண்ணப்பங்கள் மற்றும் திறன் அல்லது மேம்பாடு வாய்ப்புகள் போன்ற பல்வேறு பயன்பாட்டுகளுக்கும் இந்த அட்டை பயன்படுத்தப்பட உள்ளது. கல்வி தொடர்பான அனைத்துவித தகவல்களும் இந்த அபார் அட்டையில் இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று மத்திய அரசு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்கள், ஆதார் எண்ணோடு, அபார் எண்ணையும் கட்டாயம் சேர்த்து பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், அபார் எண்ணை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.