
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (19-10-23) ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து என்னை விமர்சிப்பது குறித்து நான் என்றும் கவலைப்பட்டதில்லை. விமர்சனத்துக்கு நான் அஞ்சுவதில்லை. என்னை பொறுத்தவரை எனக்கென்று தனி பாணி அரசியல் இருக்கிறது. என்னுடைய கருத்துக்களை ஆக்ரோஷமாக, உரக்கமாக தொடர்ந்து பேசி வருகிறேன். தமிழ்நாட்டில் இன்றைய நிலைமையில் பா.ஜ.க நன்றாக வளர்ந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறேன். வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்களோடு தான் கூட்டணி” என்று கூறினார்.