vetrivel ammk - rajinikanth actor - Karate R. Thiagarajan Congress

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் பொருளாளரும், டி.டி.வி தினகரனின் தளபதியாகவும் இருந்த வெற்றிவேலின் மரணம் அ.ம.மு.க.வை மட்டுமல்ல அதிமுகவையும் அதிர வைத்துவிட்டது. அந்தளவுக்கு இரண்டு கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தவர் வெற்றிவேல்.

வெற்றிவேலின் மறைவையறிந்து தனியார் மருத்துவமனைக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் வெற்றிவேலின் நீண்டகால நண்பரான கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட வெற்றிவேலின் உடலை கண்டு கதறினார் கராத்தே தியாகராஜன். கராத்தேவை தவிர வெற்றிவேலின் உடலுக்கு மரியாதை செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை மருத்துவமனை நிர்வாகம்.

அவரது மரணத்தை ரஜினிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் கராத்தே தியாகராஜன். கடந்த காலங்களில் பல முறையும், சமீபகாலங்களில் இரண்டு முறையும் ரஜினியை சந்தித்துள்ள வெற்றிவேல், ரஜினியின் நட்பை பொக்கிஷமாக பாதுகாத்தவர். அதனாலேயே, வெற்றிவேலின் மறைவு ரஜினியைப் பாதித்துள்ளது. வெற்றியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்திருக்கிறார் ரஜினி.

Advertisment

கடந்த காலங்களில் (1996) தி.மு.க - த.மா.கா கூட்டணி உறவு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும். இவர்கள்தான், அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த ரஜினியைஅடிக்கடி சந்தித்து அரசியல் ரீதியான பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரஜினியிடம் சில விசயங்களைப் பேசுவதற்கு கராத்தே தியாகராஜனையும் வெற்றிவேலையும் தான் அனுப்பி வைப்பார் மறைந்த தலைவர் மூப்பனார். அந்தளவுக்கு, இவர்கள் இருவரும் மூப்பனாரின் தளபதிகளாக இருந்தவர்கள்.

அந்த வகையில் வெற்றிவேலின் மரணம் ரஜினியை வெகுவாகப் பாதித்தது. வெற்றிவேலின் மகன் பரத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்தியுள்ளார் ரஜினி!