america washington dc airport flight incident President Trump criticism

அமெரிக்காவின் வாசிங்டன் டீசியில், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (30.01.2025) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று, இந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய விமானம் பொடொமாக் ஆற்றில் விழுந்தது. இதனையடுத்து, மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம், விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதே சமயம் இந்த விபத்து தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை விசாரணையைத் தொடங்கினர். இந்த குழுவினர் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் இந்த விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது வரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், “விமானப் போக்குவரத்துத் துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் டீசி விமான விபத்துக்குக் காரணம் ஆகும்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.