Skip to main content

அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு! திமுக கண்டனம்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
dmk

 

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். காணொளிக்காட்சி வாயிலாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பேர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், பொருளாளராக தேர்வான டி ஆர் பாலு துணைப் பொதுச்செயலாளராக  நியமனம்  செய்யப்பட்டுள்ள   க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோர்க்கு  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்தக் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


 

தீர்மானம் :  1

 

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் - பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும்;

 

துணைப் பொதுச்செயலாளராக  நியமனம்  செய்யப்பட்டுள்ள   டாக்டர் க.பொன்முடி - திரு. ஆ.இராசா ஆகியோர்க்கும்

 

dmk General Committee

 

வரவேற்பும், வாழ்த்தும்!

 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைத் தடம் பற்றி வளர்ந்த, கழகத்தின் மூத்த முன்னோடி  திரு. துரைமுருகன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளராக,  ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு தனது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

பள்ளிப் பருவத்தில் போர்க்குணம் கொண்டவர். சத்தியவாணிமுத்து அம்மையாரை அழைத்து கிளைக் கழகம் துவக்கி, அக்கிளைக் கழகச் செயலாளராகப் பொறுபேற்றவர். பச்சையப்பன் கல்லூரி தந்த திராவிட இயக்கப் பண்பாட்டுச் செயல்வீரர் - சென்னை அனைத்துக் கல்லூரிகள் தமிழ் மன்றத் தலைவர் - திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது 1963-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மூலம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அறிமுகமாகி,  1965 இந்தி எதிர்ப்புப் போரில் முதலில் கைதான மாணவர் தலைவர் - பேரறிஞர் அண்ணாவுடன் சிறைவாசம் - மிசாவில் ஒரு வருடம் சிறை வாசம் - 9 முறை சட்டமன்ற உறுப்பினர் - கழகத்தில் தணிக்கைக்குழு உறுப்பினர் - மாணவர் அணிச் செயலாளர் - தலைமைக் கழக முதன்மைச் செயலாளர்  - கழக துணைப் பொதுச்செயலாளர் - கழகப் பொருளாளர் என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட கொள்கைக் கருவூலம் திரு. துரைமுருகன் அவர்கள், பொதுப் பணித்துறை அமைச்சராக, தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து சிறப்புறச் செயலாற்றியவர்.

 

dmk General Committee

 

“முத்தமிழறிஞர் அவர்களிடமிருந்து அணுவளவும் விலகாமல் அருகிலேயே இருந்து சேவகம் செய்யும்  ஒரு சீடனைப் போல் தொடர்ந்து இருந்து வருவதுதான் நான் பெற்ற பேறு” என்றும்; “அன்றும், இன்றும், என்றும் கலைஞரின் பாசறையில் வளர்ந்த கட்டுப்பாடான சுயமரியாதை வீரன்” என்றும்;  தனது கோட்பாடாக - கொள்கை உறுதிப்பாடாக நிலைநிறுத்தி - மக்கள்  பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அயராது பணியாற்றி வரும் அவர், இன்றைக்கு சட்டமன்றத்தில்  எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில், கழகத்தின் “இடி மின்னல் மழை”களில் ஒருவராக, இந்த இயக்கத்திற்கு அருந் தொண்டாற்றி வரும் அவர் - கழகத்தின் பொதுச்செயலாளராக, முன்னெப்போதும் போல், கழகத் தலைவருக்கு  உற்ற துணையாகவும், உணர்வு மிக்க உடன் பிறப்பாகவும் இருந்து,  எந்நாளும் கழகப் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்ச்சி கொள்கிறது.

 

கழகப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டி.ஆர்.பாலு அவர்கள் 1957ல் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகி, பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என்று படிப்படியாய், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பம்பரம் போல் சுழன்று பணியாற்றி - 1974ல் கழகத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளரானவர். மிசா நெருக்கடி காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஒட்டுநராகவே பணியாற்றியவர். மிசாவில் கைதாகி சிறை சென்றவர். 1983 முதல் 1992 வரை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர்.

 

பாரம்பரியம் மிக்க கழகக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தென்சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1986 முதல் 1992 வரை கழக மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி, பாராளுமன்ற மற்றும் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் கழகத்தின் கருத்துகளைத்  திறம்பட எடுத்து வைத்தவர். சாலை மற்றும் தரை வழிப் போக்குவரத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர். தமிழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் “பேரறிஞர் அண்ணாவின்” கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப் பாடுபட்டவர். அவரது பெயர் கூறும் பூகோள அடையாளங்கள் நிரம்ப உண்டு. அதிமுக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது, காணப் பொறுக்காமல் கொதிப்படைந்து, மத்திய அமைச்சர் என்றும் கருதாமல், துணிச்சலுடன்  நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, மறைந்த முரசொலி மாறன் அவர்களுடன் கைதான அவர் ஆவேசம் நிறைந்த போராட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்.

 

dmk General Committee

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டத் தளபதியாக விளங்கியவர் -  கழகத் தலைவர் அவர்களின் தளபதியாக, முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி - தற்போது பாராளுமன்ற தி.மு.க. குழுவின்  தலைவராக இருக்கும் அவர்- கழகப் பொருளாளராக  ஒருமனதாகத்  தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு கூறி, பாராட்டுதலைத் தெரிவித்து;  அவரது அயராத கழகப் பணி இன்றுபோல் என்றென்றும் இனிதே  தொடர்ந்திட இந்தப் பொதுக்குழு இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறது.

 

கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - பேராசிரியர், நாவலர், மதியழகன் ஆகியோர் வரிசையில், திராவிட இயக்கத்திற்குத்  தந்த கொடைகளில் ஒருவரான - களப் போராளிகளில்  ஒருவரான - டாக்டர் திரு.க.பொன்முடி; தனது 17 ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்து விட்டு, திராவிட இயக்கத்துடன் தன்னை அய்க்கியப்படுத்திக்  கொண்டவர். அவர் நாடு போற்றும் நற்றமிழ்ப் பேச்சாளர்; ஆழ்ந்த சிந்தனைமிக்க அவர் எந்தக் கருத்தையும் எவரும் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம், எளிமையாக எடுத்துவைக்கக் கூடியவர்.

 

1989-ல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் வெற்றி பெற்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப்  போற்றத்தக்க முறையிலே பணியாற்றியவர். பிறகு போக்குவரத்துத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், 1997 முதல் இன்று வரை 23 வருடங்கள் விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளராக இருந்து இயக்கத்தை மிகவும் சிறப்புற வளர்த்தவர். “தரம் குறைந்த அரிசி” என்பதை நிரூபிக்க அரசு அரிசி குடோனுக்குள், துணிச்சலாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, சென்று ஆய்வு நடத்தி - அதற்காகச் சிறை சென்றவர் மட்டுமின்றி - ராணிமேரி கல்லூரியை இடிக்கும் அதிமுக அரசின் திட்டத்தை எதிர்த்து, கல்லூரிக்குள் கழகத் தலைவருடன் சென்று மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர். கழகத்தின் முதன்மை களவீரர்களில் ஒருவரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற க.பொன்முடி அவர்கள் கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு இப்பொதுக்குழு இதயபூர்வமாக பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து - முக்கியமான இந்தப்  பொறுப்பில் அவர் மேலும் சிறப்புடன் கழகப் பணியாற்றிட வாழ்த்துகிறது.

 

dmk General Committee

 

கழகப் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஆ.இராசா அவர்கள் இளமைப் பருவத்திலேயே திராவிட இயக்க சித்தாந்தங்களில், இயல்பாகவே தீவிர ஈடுபாடு கொண்டு - தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தம் எழுத்துகளையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் கசடறக் கற்று - பெரம்பலூர் மாவட்டக் கழக இலக்கிய அணிச் செயலாளர், 1997ல் ஒன்றியச் செயலாளர், பிறகு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை  வகித்து - 2009 முதல், கொள்கை பரப்புச் செயலாளராகப்  பணியாற்றி வரும் திரு.ஆ.இராசா, பெரம்பலூர், நீலகிரி தொகுதிகளில் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் - சுற்றுச்சூழல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை ‘கேபினெட்’ அமைச்சராகவும் பணியாற்றி - நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவர்,  சமூக சீர்திருத்த சிந்தனைகள் நிறைந்தவர்.  திரு.ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து - கழகப் பணியில் அவர் மேலும் சீரும் சிறப்புமாகச் செயலாற்றிட வாழ்த்துகிறது.  

 

தீர்மானம் :  2

பேரிடர் காலத்திலும் சீரிய முறையில் உழைக்கும் கழகத் தலைவர், கழகத் தோழர்கள், தன்னார்வலர்கள், மனிதநேயப் பண்பாளர்கள் - அனைவர்க்கும் பாராட்டும் வணக்கமும்!

 

அனைத்து முனைகளிலும் மக்களைப் பாதிக்கும் அ.தி.மு.க. அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசு ஆகியவற்றின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து முதலில் குரல் கொடுத்து, கழகத்தின் கூட்டணிக் கட்சிகளுடன் உரிய முறையில் ஆலோசனை நடத்தி;  கொரோனா  காலத்தில்  இதுவரை 104  காணொலிக் காட்சிகள் மூலம் 8,529 பேரிடம்  விவாதித்து;  குறிப்பாக, 92 காணொலிக் காட்சிகள் மூலம் எல்லா நிலைகளிலும் உள்ள 7,714 கழக நிர்வாகிகளுடன் உரையாடி; பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு; வல்லுநர்களின் வழிகாட்டுதல்களைப் பெற்று; கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசாதாரணமான இந்தப் பேரிடர் காலத்திலும் சாதாரண காலத்தில் உழைப்பதைப் போல், ஓயாது உழைத்து வருகிறார்.

 

dmk General Committee

 

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், கழகத் தலைவரின் அறிவுரைகளையொட்டி ஆற்றிவரும் மக்கள் பணிகள் - குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவும் கரங்களாகத் திகழ்ந்திடும் செயல்பாடுகள் பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது என்பதையும்; இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகிறது என்பதையும்; இப்பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

 

கொரோனா பேரிடர் காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதின் மூலம், ஒரு கோடிப் பேருக்கும் மேல் ‘பட்டினி போக்கி - பசித்த வாய்க்கு உணவளிப்போம்’ என்ற உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டியது அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் விதத்தில் அமைந்தது.

 

பேரிடர் காலத்தில், ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசு, மக்களின் துன்பங்களைத் துடைப்பதில் தோல்வியடைந்த நிலையில், ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கழகத் தலைவர் அவர்கள் முன்னணியில் நின்று மறக்க முடியாத மனிதநேயத்துடன் ஆற்றிய மக்கள் பணிக்கு இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

கழகத் தலைவரின் இந்த சீரிய முயற்சிகளுக்கு மிகச் சிறப்பாக உதவிசெய்த சமூக சேவகர்களுக்கும், சமூகநல அமைப்புகளுக்கும், கட்சி சாராத - நேசக்கரம் நீட்டிய நிறைகுடப் பண்பாளர்களுக்கும், கடமை உணர்வோடு களத்தில் நின்று பணிபுரிந்த கழகத் தோழர்களுக்கும் இந்தப் பொதுக்குழு நன்றியும், வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறது.

 

தங்கள் உயிரைத் துச்சமென மதித்து நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பொதுக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  3

அருந்ததியினர் உள்ஒதுக்கீடு தொடர்பான  சமூகநீதித் தீர்ப்பிற்கு வரவேற்பு!

 

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 7.6.1971-ல் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 16 சதவீத இடஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு -  1990-ல் அந்த 18 சதவீதத்தையும் முழுமையாகப் பட்டியலின மக்களுக்கே உரித்தாக்கி - தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீட்டை 22.6.1990 அன்று பழங்குடியின மக்களுக்கு மட்டுமே அளித்து - பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை

 

19 சதவீதமாக உயர்த்தியதோடு - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இடஒதுக்கீட்டையும் சேர்த்து - தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டு வரலாற்றை உருவாக்கி - சமூகநீதியின் பிறப்பிடமாக இந்தியாவில் தனித்துவம் பெற்று, தமிழகம் பெருமையுடன் தலைநிமிர வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆவார்கள்.

 

இந்தச் சூழ்நிலையில் 29.4.2009 அன்று, அருந்ததியினர் சமுதாயத்திற்கான உள்ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு - இன்றைக்கு அருந்ததியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உயர்ந்த வழியாக இருந்து வரும் அந்த உள்ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை இந்தப் பொதுக்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

 

இத்தீர்ப்பு, கழக அரசு உருவாக்கி வளர்த்த சமூகநீதி எனும் நந்தவனத்தில், ஒரு நந்தா விளக்கினை ஏற்றித் தந்திருக்கிறது. அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி, யாராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் இப்பொதுக்குழு பதிவு செய்ய விழைகிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  4

மருத்துவக் கல்வியில் கழகம் நிலைநாட்டிய சமூகநீதி!

 

 “மத்தியத் தொகுப்பிற்குத் தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” - “இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது” (not bereft of substance) என்று, சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக இந்தப் பொதுக்குழு வரவேற்கிறது.

 

திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த சமூகநீதிக்கான சட்டப் போராட்ட வழக்கில் - இந்தத் தலைமுறையை மட்டுமின்றி - எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் தொலைநோக்குச் சிந்தனையும் சிறப்பும் கொண்ட இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு - முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்தளித்த வழியில் பாடுபட்டு, வழக்கில் வெற்றி பெற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு இதயம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில், இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  5

முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு!

 

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மூன்றாவது முறையாக முதலமைச்சரான 1989-ல், முதன்முதலில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 சதவீத உள்ஒதுக்கீடை வழங்கி - நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, உள்ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் அரசு மருத்துவர்களுக்கான 9.2.1999 அன்று வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு - அதை உச்சநீதிமன்றம் வரை, திறமையாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்.

 

ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ‘கிராமங்கள், மலைப் பகுதிகள், மிகுந்த சிரமமான பகுதிகள்’ ஆகியவற்றில் மக்களுக்குச் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, ‘வெயிட்டேஜ் மதிப்பெண்கள்’ அளித்து அரசாணை பிறப்பித்து - தனது ஆட்சிக் காலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமின்றி - தமிழக அரசின் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் கலைஞர்.

 

கலைஞர் வழங்கியிருக்கும் அந்த உள் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதில் குறுக்கிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லையென்றும்,  31.8.2020 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தப் பொதுக்குழு மனமார வரவேற்று மகிழ்ச்சி கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  6

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் சமூக ‘அநீதி’ - களைந்திட நடவடிக்கை எடுத்திடுக!

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் கடந்த 4.8.2020 அன்று வெளியிடப்பட்டன. அதற்கான ‘கட்-ஆப்' மதிப்பெண்கள் பட்டியலில், மத்திய பா.ஜ.க. அரசு, அவசர அவசரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கொண்டு வந்த, ‘முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு’, இந்தக் குடிமைப் பணிகள் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், சமூகநீதிக்குப் பெரும் பாதகம் விளைவித்துள்ளதைக் காண முடிகிறது.

 

முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துக் கட்டங்களிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு’ப் பிறகு, வரிசையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தினர், பழங்குடியினத்தினர் ஆகியோர் நிற்க வேண்டிய அநீதி இழைக்கப்பட்டு - வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றாமல் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது கவலையளிக்கிறது.

 

இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க - அதற்கான நிர்வாகக் கட்டமைப்பில் இடம்பெறும் உரிமைபெற இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ‘இந்தியக் குடிமைப் பணிகள்’ தேர்வு குறித்து - பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தி, நியாயம் வழங்கி - பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தினரின் சமூகநீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  7

“தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்!

 

 “தேசிய கல்விக் கொள்கை 2019” குறித்து - கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14.7.2019 அன்று வல்லுநர்கள் குழு ஒன்றினை அமைத்து, அறிக்கை பெற்று, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் 28.7.2019 அன்று அளித்து, “அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்ததை இந்தப் பொதுக்குழு நினைவு கூர்கிறது.

 

“மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை”, தமிழகத்தில் பேறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை இக்கூட்டம் நிராகரிக்கிறது. இந்தித் திணிப்பை மும்மொழித் திட்டத்தின் மூலம் தீவிரமாக்க மத்திய பா.ஜ.க. அரசு தந்திரமாகத் திட்டமிடுவதை இப்பொதுக்குழு ஆணித்தரமாக எதிர்க்கிறது. சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது.

 

ஆனால், ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும்  இணைத்து  வழங்கப்பட  வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி; 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு; தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘பிளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம்; தமிழகத்தில் ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன்பே மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி; இருக்கின்ற பள்ளிகளையும் மூட வழிவகுக்கும் பள்ளி வளாகங்கள்; ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம்  உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சம் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு, மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது சர்வாதிகாரப் போக்காகும்.

 

உயர்கல்வியில்; தன்னாட்சி உரிமை பெற்ற தமிழ்ச் செம்மொழி மத்திய நிறுவனத்தைப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வி ஆணையம் அமைப்பது; கலை மற்றும் அறிவியல் பட்டயப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது; மாநிலங்களில் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடங்களைத் தேசிய அளவில் வகுப்பது; ஆகியவை மாநிலங்களைப் புறக்கணித்து, கல்வியை மையப்படுத்தி வைக்கும் பின்னடைவுப் போக்காகும்.

 

dmk General Committee

 

ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது. நாடாளுமன்றம் கூடி, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ‘தேசிய கல்விக் கொள்கை-2020’-ஐ நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது என்றும்; தமிழகத்தின் இருமொழித் திட்டத்திற்கு எதிரான இந்தக் கொள்கையை அ.தி.மு.க. அரசும் கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் :  8

“சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐக் கைவிடுக!”

 

 “புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு - அதன்மீது ‘கருத்துக்கேட்பு’ என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும்  நடத்தி - அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் கூட இந்த அறிவிக்கையை வெளியிட நீதிமன்றங்களை நாட வேண்டிய பரிதாபமான நிலையை உருவாக்கி, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

நடைமுறையில் உள்ள “சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை”யே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழி வகுக்க போதுமானதில்லை என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் - இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு அறிவிக்கை, “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986”-ஐ முற்றிலும் நீர்த்துப் போக வைக்கும்.

 

விவசாயிகளுக்கு எதிரான  சேலம் - சென்னை  பசுமை வழிச்சாலைத் திட்டம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டும் திட்டம், காவிரி டெல்டா பகுதியில் அ.தி.மு.க. அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கும் திட்டங்கள், கெயில் குழாய் பதிப்புத் திட்டம், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்கள் போன்றவை தமிழகத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் கடினமான இந்தவேளையில், ‘பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை’ப் பலவீனப்படுத்தி, ‘மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவிற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்து; சுற்றுச்சூழலையும், விவசாயப் பெருமக்களின் வாழ்க்கையையும், வேளாண்மையையும் உருக்குலைக்கும் திட்டங்களை ஊக்குவிக்கக் கொண்டுவரப்பட்டுள்ள - மாநில உரிமைகளுக்கு முரணான - ஜனநாயக விரோத - சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இப்பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  9

அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

 

வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடையக் காரணமாயிருந்து, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்து, இதுவரை இல்லாத அளவிற்கான வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி, அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நெறிகளுக்கு விரோதமாக மத்தியில் சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அடுக்கடுக்கான ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ விளங்கி, ஊழலில் ஊறிப் போயிருக்கின்ற ஆட்சியாளர்களை மிரட்டி தமிழக உரிமைகளைப் பறித்து, தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களை மாநிலத்தில் புகுத்தி, தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியைத் திணித்து, தமிழகக் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருவதோடு; வெறுப்புணர்வுகளை விதைத்து, சமூக-மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலையும் உருவாக்கி வருகிறது.

 

சுங்கக் கட்டணம் உயர்வு, ஏழை எளிய மக்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மான்யம் ரத்து, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவின் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரம் ரத்து, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் என ‘கொரோனா காலத்தை’, உழைப்போர்க்கும் உழவர்களுக்கும் எதிரான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் காலமாக மாற்றி;

 

தனது பெரும்பான்மை பலத்தை தவறாகப் பயன்படுத்தி, விமான நிலையங்கள், எல்.ஐ.சி நிறுவனம் போன்றவற்றைத் தனியார் மயமாக்கி, நாட்டின் சமூக - பொருளாதார - தொழில் கட்டமைப்புகளுக்கும், அடித்தட்டு மக்கள் போராடிப் பெற்ற சமூகநீதிக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பா.ஜ.க.விற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

அ.தி.மு.க. அரசின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கி, தமிழகத்தில் படுமோசமானதோர் அரசு நடப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து; தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, மக்கள் விரோதத் திட்டங்களைத் திணித்திடும் மத்திய பா.ஜ.க. அரசின் கபட முகத்தை மக்கள் மன்றத்தில் உணர்த்திடும் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே ஆற்றுவதென இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  10

ஸ்டர்லைட் ஆலை’துப்பாக்கிச்சூட்டின் பலிகளுக்கு  நீதி வேண்டும்!

 

 “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள மிகவும் முற்போக்கான தீர்ப்பை வரவேற்கும் இந்தப் பொதுக்குழு, இத்தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளித்து, மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் மகத்தான தீர்ப்பு என்று பெருமிதம் கொள்கிறது. சுற்றுச் சூழலுக்கும் - தங்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து, ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராடிய அப்பாவி மக்கள் மீது, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 அப்பாவி உயிர்களைக் கொடூரமாகப் பறித்த அ.தி.மு.க. அரசின் அட்டூழியச் செயலைத் தமிழக மக்கள் எப்போதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். ஏதுமறியாத மக்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை உரிய நியாயம் கிடைக்காதது குறித்து இந்தப் பொதுக்குழு தனது வேதனையைப் பதிவு செய்து - அந்தத் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் :  11

கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் படுதோல்வியடைந்த  அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!

 

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க இயலாமல் - ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் போதும் - நிர்வாக ரீதியாகத் தோல்வியடைந்து - மக்களுக்குப் பெரிதும் தேவையான நிதி நிவாரணம் வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய 5000 ரூபாய் நேரடிப் பண உதவியைக் கூட வழங்காமல், நோய்த் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் இறப்புக் கணக்குகளை மறைத்தும் - குறைத்தும் திரித்தும் வெளியிட்டு, ஒவ்வொரு  வீட்டிலும் வேலை இழப்பிற்கும் - வருமான இழப்பிற்கும் வித்திட்டு, அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஏராளமான அல்லல்களுக்கு ஆளாக்கியது அ.தி.மு.க. அரசு. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்து - ஒட்டுமொத்த சென்னை மாநகரத்தின் பெரும்பகுதி மக்கள் சொந்த மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிபெயரும் சூழ்நிலையை உருவாக்கி, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் - அ.தி.மு.க. அரசு அவ்வப்போது பிறப்பித்த ஊரடங்கினால் மக்கள் வேதனைத் தீயில் புழுவாகத் துடித்துத் துவண்டு போனார்கள்.

 

இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு, கொரோனா டெண்டர்களில் முறைகேடு, அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் முதல் முகக்கவசங்கள், ப்ளீச்சிங் பவுடர் வாங்குவது, கிருமி நாசினி மற்றும் கொரோனா தடுப்புத் தகரங்கள், சவுக்குக் கட்டைகள், பூட்டுகள், கயிறுகள் ஆகியவற்றை வாங்குவது வரை அனைத்திலும் முறைகேடு - கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் உணவுகளில்- உதவிகளில் முறைகேடு - என கோரப் பேயாட்டம் போட்ட ‘கொரோனா ஊழல்’ தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

 

கொரோனா பேரிடரில் முன்களப் பணியாளர்களாக நின்றவர்களுக்கு அறிவித்த 2 லட்சம் ரூபாய் வழங்காமல் - பணியில் உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி, வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்காமல் - வெற்று அறிவிப்புகளிலும், வீண் சவடால்களிலும் கால விரயம் செய்து; இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு போல் கொரோனா நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்த அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என்ற அளவிற்கு - கையாலாகாத அரசை நடத்தி வருகிறார் தமிழக முதலமைச்சர்.

 

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன்; கொரோனா பேரிடர் ஊழல்களில் திளைத்த அமைச்சர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டபூர்வமாகப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் என்று எச்சரித்திடவும் கடமைப்பட்டுள்ளது. 

 

dmk General Committee

 

தீர்மானம் :  12

மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட; கழகத்தை ஆட்சிபீடம் ஏற்றிட; கழகத் தலைவரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்திட; சூளுரை மேற்கொள்வோம்!

 

 ‘கூவத்தூர்’ கூத்தின் மூலம் கோட்டை ஏறிய தற்போதைய அ.தி.மு.க. அரசு, ஊழல், ஊதாரித்தனம் ஆகியவற்றின் உருவகமாகி; தமிழக மக்களைத் தணியாத இன்னல்களில் தள்ளி; மக்கள் விரோத அரசாக; “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்ற ஒரே நோக்கத்திற்காகச் செயல்பட்டு; மக்களுக்கான பணிகளில் முற்றிலும் தோற்றுவிட்டதொரு நிர்வாகத்தை நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

அனைத்துத் துறை டெண்டர்களிலும் ஊழல், ஆரவாரமான வெற்று அறிவிப்புகள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்குக் கைலாகு, இந்தித் திணிப்பிற்கு மறைமுக ஆதரவு, ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு வாங்க முடியாமல், அந்தத் தேர்வு கொரோனா காலத்தில் நடத்துவதைக் கூட எதிர்க்க இயலாத போக்கு, விவசாயிகளுக்கு எதிரான சேலம் எட்டுவழிச் சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்ற இரக்கமற்ற போக்கு, ‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்று கூறிவிட்டு இதுவரை அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவது, தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மறுப்பு, பத்திரிகைகள் மீது அடக்குமுறை, நேரடிக் கொள்முதல் நிலையங்களை போதிய அளவு திறக்காமல் விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியது, 426-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தி படுதோல்வி, அந்நிய முதலீடு திரட்டச் சென்று தோல்வி - ஆடம்பரச் செலவு, கொரோனா பேரிடர் காலப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று ‘முதலீடு வராத’ ஒப்பந்தங்களை இயற்றி ஏமாற்று நாடகம்,தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, 4.56 லட்சம் கோடி ரூபாய்க் கடன்கள், நிதி நெருக்கடி, நாள்தோறும் கொலை - கொள்ளைகள், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உள்ளிட்டோரின் காவல் நிலைய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு -2020-ஐ எதிர்க்க இயலாமை, ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத் தொகையைப் பெற முடியாமை, தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மாநில உரிமைகளைக் காவு கொடுத்தல், என அ.தி.மு.க. அரசின் தோல்விகளை வரிசைப்படுத்தினாலும், பட்டியல் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும்.

 

ஆகவே இந்த மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சட்டவிரோத அ.தி.மு.க. ஆட்சியை சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் வீழ்த்தவும் கழகத்தை ஆட்சிபீடம் ஏற்றவும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக ஆட்சியில் அமர்த்தவும்,  தமிழகத்தை  மீண்டும் முன்னேற்ற  வளர்ச்சிப்  பாதையில் செலுத்தவும், அரும்பாடுபடுவதென இந்தப் பொதுக்குழு சூளுரை மேற்கொள்கிறது.

 

dmk General Committee

 

தீர்மானம் :  13

விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்!

 

மத்திய பா.ஜ.க. அரசும்-மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், விவசாயிகள் விரோத அரசாக செயல்பட்டு வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுதல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுதல், காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணைய்க் கிணறுகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பாதுகாப்பு பெட்ரோலிய மண்டலங்கள், நியூட்ரினோ திட்டம், விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்புத் திட்டங்கள், உயர் மின் கோபுரங்கள் அமைத்தல், சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விரோத திட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தில் புகுத்தி - அதை தட்டிக் கேட்க முடியாமல், கைகட்டி  வேடிக்கை பார்த்து நிற்கிறது அ.தி.மு.க. அரசு.

 

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது, நூற்றுக் கணக்கான கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வழங்காதது, பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் கேட்டு அளித்த விண்ணப்பங்களுக்கு இணைப்புக் கொடுக்க 19 வருடங்களாக விவசாயிகளை காத்திருக்க வைப்பது, விதை நெல்லுக்கு வழங்கும் அரசு மான்யத்தில் கொள்ளை,  உளுந்து போன்ற சிறுதானிய விதைகளை தனியாருக்கு விற்று விட்டு விவசாயிகளுக்கு துரோகம், பயிர்க் கடன் வழங்குவதில் முறைகேடு,பி.எம். கிசான் நிதியுதவித்  திட்டத்தில் முறைகேடு, காவிரி நீர்ப் பாசனக் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை விவசாயிகள் சங்கங்களுக்கு கொடுக்காமல் அதிமுகவினருக்குக்  கொடுத்து பணி செய்யாமலேயே பணத்தைச் சுருட்டியுள்ள முறைகேடுகள், விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கொடுக்க முன் வராதது, நெல் - கரும்பு  கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க மறுப்பது, முழுமையாகத் தோற்று விட்ட உழவன் செயலி- இயந்திர நடவு மான்யத்தை உயர்த்த மறுப்பது, அறுவடை இயந்திரங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் அவதி போன்றவற்றால் தமிழகத்தில் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் கடும் வாழ்வாதார இழப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

 

மத்திய - மாநில அரசுகளின் விவசாயிகள் விரோதப் போக்கினால் இன்றைக்கு நாடு முழுவதும் 42,480 விவசாயிகளும், தினக்கூலிகளும் தற்கொலை செய்துகொள்ளும் சோக மயமான சூழல் உருவாகியிருப்பதை இந்தப் பொதுக்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. ஆகவே மத்திய- மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைககளையும் கைவிட்டு - விளைபொருள்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும்- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும் முன்வர வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட அருண் நேருவுக்கு வாக்களியுங்கள்” - சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Soundarapandian MLA Propaganda in support of Arun Nehru.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கல்லக்குடியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது; தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3 ஆண்டுகளில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள், லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம், திருமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.300 கோடிக்கான திட்டங்களில் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. லால்குடி தொகுதியில் 4 உயர்மட்ட பாலங்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லால்குடி நகராட்சி பகுதியில் புதிய மின்மயான பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம், நந்தியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கல்லக்குடி நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புள்ளம்பாடி பேரூராட்சியில் புதிய கழிவுநீர் வடிகால் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புள்ளம்பாடியை மையமாக வைத்து புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு லால்குடி தொகுதியில் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண்நேருவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.

இதில் புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் வடிவேலு, ஆலம்பாடி முருகன், செந்தாமரை கண்ணன், ராஜமாணிக்கம், வக்கீல் சேவியர், கல்லக்குடி நிர்வாகிகள் குமார், சையதுஒலி, அம்பேத்கர், காங்கிரஸ் பிரமுகர்கள் அடைக்கலராஜ், அடைக்கலம், வி.சி.க. நிர்வாகி விடுதலை இன்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.