ADVERTISEMENT

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: ஆவின் பால் பண்ணையை மூடி சீலிட்டு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பால் முகவர்கள் சங்கம் 

09:15 AM May 04, 2020 | rajavel

ADVERTISEMENT



"பொதுமக்கள் உயிரோடு விளையாடாதீர்கள், ஆவின் பால் பண்ணையை மூடி சீலிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கரானா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (02.05.2020) மாலை முதல் ஆவின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கடந்த இருதினங்களாக வடசென்னை பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தடைபட்டு அதன் காரணமாக ஆவின் பாலினை பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதோடு, பொதுமக்களும் ஆவின் பால் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.


கரானா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்த போதே ஆவின் பால் பண்ணைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், அங்குப் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பால் முகவர்களுக்கும் முகக்கவசம், கையுறை, சானிடைசர் வழங்கிட வேண்டும், மாவட்ட குளிரூட்டும் நிலையங்களில் (CMC, BMC) இருந்து பால் பண்ணைகளுக்கு பால் கொண்டு வரும் வாகனங்களையும், பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஏற்றச் செல்லும் மொத்த விநியோகஸ்தர்களின் வாகனங்களையும் முறையாக கிருமி நாசினி தெளித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்,

அது போல் அந்த வாகனங்கள் பால் விநியோகத்திற்குப் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் போதும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு கரானா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆவின் நிர்வாகத்திற்கும், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கும் ஏற்கனவே கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.

ஆனால் தமிழக அரசு கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் எப்படி மெத்தனப் போக்கோடு நடந்து கொண்டதோ அது போலவே அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால்வளத்துறையின் ஆவின் பால் பண்ணைகளிலும் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்திருப்பது கடும் அதிர்ச்சியைத் தருகிறது.


உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆவின் நிறுவனம் மட்டுமே செயல்படுவது போல் சித்தரித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது துறையின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


கரானா நோய் தொற்றானது வெப்பநிலையை விட குளிர் நிலையில் நிலைத்து நின்று தாக்கும் வல்லமை கொண்டது என்பதால் மாதவரம் ஆவின் பால் பண்ணையைக் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து, சீலிட்டு பால் பண்ணை முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே ஆவின் பால் பண்ணையைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மாதவரம் ஆவின் பால் பண்ணை மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் வரை பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்திட மாற்று ஏற்பாடுகளைத் தமிழக அரசு விரைந்து செய்து பொதுமக்களின் பாதுகாப்பினையும், பால் விநியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT