'ஒரு பிரம்மாண்ட கட்சி கூட்டணியில் சேர உள்ளது'-எடப்பாடி பழனிசாமி சொல்வது யாரை?

a4449

A big party is about to join the alliance' - who is Edappadi Palaniswami referring to? Photograph: (admk)

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று (16.07.2025) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிசாமி “விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் நடுவதற்கு அனுமதி தர முடியாது என்று தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த (திமுக) கூட்டணியில் இருக்க வேண்டும். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் தொடர வேண்டும். சிந்தித்துப் பாருங்கள். அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் எங்கள் கூட்டணியில் சேர்கின்றவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்ற கட்சி அதிமுக கட்சி” எனப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் பதிலளித்திருந்தன. இது குறித்து விசிகவின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் இருந்து எங்க கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது அவராக சொல்லுகின்ற ஒரு கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்வதை அவர் திருப்பிச் சொல்லுகிறார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது'' என தெரிவித்திருந்தார்.

 

a4448
A big party is about to join the alliance' - who is Edappadi Palaniswami referring to? Photograph: (admk)

 

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 'இந்தியா கூட்டணியை எவராலும் தகர்க்க முடியாது' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏனைய திமுக கூட்டணி கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். பாமகவின் 37 ஆவது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் 'தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமை' என தெரிவித்திருந்தார்.

இப்படியாக சென்று கொண்டிருக்கும் சூழலில் சுற்றுப்பயணத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திமுகவை அகற்ற வேண்டும் என்ற பாஜகவின் கருத்தோடு அதிமுக ஒத்துப்போகிறது. அதனால் கூட்டணி வைத்துள்ளோம். திமுகவை அகற்ற நினைக்கும் கட்சிகளை நாங்கள் ஒன்றாக சேர்ப்போம். ஸ்டாலின் அவர்களே இன்னும் பாருங்கள் பிரம்மாண்டமான கட்சி எங்கள் கூட்டணிகள் சேர இருக்கிறது. நினைச்சு பார்க்காத அளவுக்கு ஒரு கட்சி வரப் போகிறது. 234  தொகுதியில் 210 தொகுதியில்  அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்'' என பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

தான் தனித்துதான் போட்டி என எல்லா செய்தியாளர் சந்திப்புகளிலும் நாம் தமிழர் கட்சியின் சீமான் திட்டவட்டமாக சொல்லி வருகிறார். தங்களுடைய தலைமையில் தான் கூட்டணி என விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சொல்லி வருகிறது. அதிலும் திமுக- பாஜக உடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதனடிப்படையில் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு தவெக வருவதும் கேள்விக்குறி. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ள அந்த 'பிரம்மாண்ட கட்சி' என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.  

admk Cuddalore dmk alliance parties edappaadi palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe