இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

100th rocket successfully launched BY ISRO

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று (29.01.2025) காலை 06.23 மணிக்கு இஸ்ரோ தனது 100வது ராக்கெட் (GSLV F-15) மூலம் என்.வி.எஸ். - 02 (NVS - 2) வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.

இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் வழிசெலுத்தல் அமைப்பை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 செயற்கைக்கோள் தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததையடுத்து இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதோடு விண்வெளி வழிசெலுத்தலில் இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடராக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ஏவுகணை என்ற மைல்கல்லை எட்டியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் வரலாற்றுத் தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது ஒரு பாக்கியம். இஸ்ரோ குழுவின் சார்பாக வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் மற்றும் சிலரின் எளிமையான தொடக்கத்திலிருந்து, இது ஒரு அற்புதமான பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ISRO NVS-2 Rocket satellite
இதையும் படியுங்கள்
Subscribe