Advertisment

சாதிய வன்மம்; பள்ளி மாணவனை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு; குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டு!

Untitled-1

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர், 41 வயதான சிவனேச செல்வன். இவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், சிவனேச செல்வன் கடந்த 6-ஆம் தேதி காலையில் தனது குழந்தைகளைப் பள்ளி வேனில் அனுப்பி வைப்பதற்காக ஆழ்வார் திருநகரி, மாசி வீதி வளைவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான செந்தில் ஆறுமுகம் என்பவர், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து, பள்ளிக் குழந்தைகளை உரசுவது போலச் சென்றதால், தலைமை காவலர் சிவனேச செல்வன் அவரைக் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்து சென்ற செந்தில் ஆறுமுகம், சில நிமிடங்களில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரும்பி வந்து, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஏட்டு சிவனேச செல்வனிடம், “எதற்காக அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் பேசினாய்?” என்று கேட்டுள்ளனர். “நான் போலீஸ்... என்னிடமே கும்பலாக வந்து வம்பு செய்கிறீர்களா?” என்று சிவனேச செல்வன் ஆவேசமடைந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, கல்வீச்சு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கியபோது,  தலைமை காவலர் சிவனேச செல்வன், தனது  பைக்கின் சாவியுடன் இணைந்திருந்த மெட்டல் கத்தியால் எதிர்த் தரப்பைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், செந்தில் ஆறுமுகத்தின் தம்பியும், பிளஸ் 1 பயிலும் மாணவருமான அர்ஜூனின் வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. கத்தி உடைந்து வயிற்றில் சிக்கிக் கொண்டதால், அர்ஜூன் வலியால் கதறியுள்ளார். காயமடைந்த அர்ஜூனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, முதலுதவிக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் சிக்கிய உடைந்த கத்தித் துண்டை அகற்றினர். தற்போது அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில், ஆழ்வார் திருநகரி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஏட்டு சிவனேச செல்வனை உடனடியாகக் கைது செய்தனர். பின்னர், அவரை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது. ஏட்டு சிவனேச செல்வனுக்கும், செந்தில் ஆறுமுகம் தரப்புக்கும் 6ஆம் தேதி காலையிலேயே மோதல் ஏற்பட்டு விட்டது. கத்திக்குத்து விழுந்து அர்ஜூன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி விவகாரத்தை சுமூகமாக முடிக்கலாம்  என உயர் அதிகாரிகள் முயற்ச்சித்தனர். இருப்பினும் சம்பவத்தன்று செந்தில் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால், பாதுகாப்பு கருதி ஏட்டு சிவனேச செல்வனை அருகில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனில் பகல் முழுக்க இருக்க வைத்திருந்தோம். இதனால் அவர் கடும் மன அழுத்தத்திலும்,  ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில், மாலை 6 மணியளவில், ஆழ்வார் திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் (S.I.) சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்குச் சென்று, ஏட்டு சிவனேச செல்வனிடம் சில விவரங்களைக் கேட்டபோது, அவர் இழிவாகப் பேசி, எஸ்.ஐ-யைத் தள்ளி தாக்கியுள்ளார். அங்கிருந்த சக காவலர்கள் சண்டையைத் தடுத்து விலக்கியுள்ளனர். இதையடுத்து, எஸ்.ஐ சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். விசாரிக்க வந்த எஸ்.ஐ-யை ஏட்டு தாக்கிய சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, ஏட்டு சிவனேச செல்வனை உடனடியாகக் ரிமாண்ட் செய்ய  எஸ்.பி.உத்தரவிட்டார். மேலும் எஸ். ஐ. சுப்பிரமணியத்தை சரி கட்டிய உயர் அதிகாரிகள் அவருக்கு மறுநாள் ரெஸ்ட் கொடுத்து விட்டனர்.  அதன் பிறகு, கத்திக்குத்து சம்பவம் தொடர்பான புகாருக்கு, எஸ்.ஐ. சுப்பிரமணியன் மூலம் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக ஏட்டு சிவனேச செல்வன் கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தலைமை காவலர் சிவனேச செல்வனின் மனைவி மகராசி, ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், “பள்ளிக் குழந்தைகளை உரசியவாறு அதிவேகமாக பைக்கில்  செந்தில் ஆறுமுகமும் அர்ஜூனும் சென்றனர். ‘நில்லுங்கள்’ என்று கூறியதற்காக, என் கணவர் சிவனேச செல்வனை கும்பலாக வந்து தாக்கினர். மேலும், பொன்னுச்சாமி, மாசானம் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட கும்பல், எங்கள் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, ‘உங்களுக்கு அவ்வளவு திமிரால..?’ என்று மிரட்டல் விடுத்து, வீட்டின் மீது கற்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்தனர். எங்கள் உறவினர் முருகேசன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், அந்தக் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் கடந்தும், மகராசி அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிகாரிகளைக் கண்டித்து, அடுத்தகட்டமாகப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர் சிவனேச செல்வனின் உறவினர்கள்.

“போலீஸாகவே இருந்தாலும், முதலில் சாதியைத்தான் பார்க்கிறார்கள். இங்குள்ள ஒரு கூட்டம், எங்களைச் சாதி வன்மத்துடன் அணுகியதால்தான் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது” என்று சிவனேச செல்வனின் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பைக்கில் வேகமாகச் சென்றதைக் கண்டித்த விவகாரம், கத்திக்குத்து, கைது, முற்றுகை என்று நகர்ந்து, சாதி நெருப்புக்குள் கனன்று கொண்டிருக்கிறது. 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

school student police Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe