நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் பொன்னுசாமி (வயது 74). இந்நிலையில் பொன்னுசாமி கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் நேற்று (22.10.2025) இரவு வழக்கம் போல் அவரது வீட்டில் உறங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று (23.10.2025) காலை அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

Advertisment

இதனைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொல்லிமலையில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பொன்னுசாமி ஏற்கனவே உயிரிந்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவு சேந்தமங்கலம் தொகுதி மக்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னுசாமி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று 2 முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

திமுகவின் மீது தீவிரப் பற்றும், கலைஞர் மீதும், என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராகக்  திமுவவை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment