மரபுக் கவிதை வித்தகர், கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார்.
'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்றவர் ஈரோடு தமிழன்பன். கவிஞராக மட்டுமின்றி நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், ஓவியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
புதுக்கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ என பல்வேறு கவிதை படைப்பு தளங்களில் இயங்கியவர்களில் மிகவும் முக்கியமானவர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் என பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும், செய்தி வாசிப்பாளருமான ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
தமிழ் மொழி, இனம் மீது மிகுந்த பற்று கொண்டவராக கவிஞர் ஈரோடு தமிழன்பன் பன்முகத் திறமை கொண்டவர். நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர், படைப்பாளி, கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர் என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். வாழும் வரை தமிழுக்காக உழைத்தவர். கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/a5770-2025-11-22-19-32-43.jpg)