'He showed respect even to those with alternative policies' - Tamil Nadu Chief Minister pays tribute to I. Ganesan Photograph: (bjp)
பாஜகவின் மூத்த நிர்வாகியும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் இருந்தபோது இல.கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல.கணேசன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'இல.கணேசன் மறைவு வருந்தத்தக்க செய்தி' என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், டி.டி.வி.தினகரன், காங்கிரசின் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் செம்மலை உள்ளிட்ட பலரும் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், 'மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
திரு. இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர்.
மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். திரு. இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார். என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். அவரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.