ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (30.11.2025) ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இந்த தொகுதியில் ஒருத்தர் எம்.எல்.ஏவாக இருந்தார். நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தப்பட்டவர். ஆனால் ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால், ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டார்களா?. அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதிமுக ஆட்சி மலர்ந்த உடனே இந்த தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேல் வளரும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாததால் அவர் வரவில்லை என்றார். இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்று கட்சியில் சேர்ந்தீர்கள்?
உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. உங்களுக்கு பதவி கொடுத்தது அதிமுக. பல விவசாய சங்க தலைவர்கள் அனைவரும், அதிமுக ஆட்சியில் தான் நாங்கள் 50 ஆண்டுகாலம் போராடி வந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி தந்தீர்கள். அதனால் அதிமுகவுக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று கூறி அவினாசியில் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த கூட்டத்தை புறக்கணித்தவர் இந்த தொகுதியினுடைய முன்னாள் எம்.எல்.ஏ. இவரா? உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்?. எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை மதிக்கிறார்கள். ஆனால் நம் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அந்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என்றால் இவரா? மக்கள் மீது அக்கறை கொண்டவர்?.
கட்சி கட்டுப்பாட்டை மீறி வேறொரு கட்சியின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். அதுவே தவறு, அதையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அத்திக்கடவு அவனாசி திட்டத்தில் பங்கு பெறவில்லை. அதையும் நாங்கள் கண்டுகொள்ளாமல் தான் இருந்தோம். அவருக்கு உண்டான மரியாதையை நாங்கள் கொடுத்தோம். ஆனால் அவர் திருந்துவது மாதிரி அல்ல. அதற்கு மாறாக மனம் திறந்து பேசுகிறேன் என்று சொல்லி அதிமுக தலைமைக்கு காலக்கெடு விதித்திருக்கிறார். அப்படிப்பட்டவரை நாங்கள் எப்படி இயக்கத்தில் தொடர வைக்க முடியும்?. அப்படிப்பட்டவரை எப்படி இயக்கத்திலே தொடர்வதற்கு தலைமை அனுபவிக்கும்?. மூத்த தலைமைக்கழக நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து தலைமைக்கு எதிராக பொது வெளியில் பேட்டி கொடுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்கினோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/01/ed-eps-camp-2025-12-01-15-56-45.jpg)
அப்போதாவது அவர் திருந்துவார் என்று பார்த்தோம். ஆனால் திருந்துவது மாதிரி அல்ல. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் குருபூஜையின்போது அவர் சந்தித்துப் பேசினார். அதனால் அதிமுகவில் தொடர அவர் லாயக்கற்றவர் முடிவு செய்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம். அவர் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டுகாலமாக இயக்கத்தில் இருந்துகொண்டே, திட்டமிட்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டார், இயக்கத்திற்கு துரோகம் விளைவித்தார். இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்தாலும் அவரை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்” என்று விமர்சித்தார். இந்நிலையில் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு செங்கோட்டையன், “அவர் (எடப்பாடி பழனிசாமி) பெரிய தலைவர் அல்ல. அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” எனக் பதிலளிதார்.
Follow Us